இந்த செங்கல்லை உதயநிதிக்கு அனுப்புறேன்.. சீறிய அண்ணாமலை.. ஈரோடு கிழக்கில் ட்விஸ்ட்.. என்ன நடந்தது?
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாணியில் பாஜக தலைவர் அண்ணாமலையும் செங்கல் ஒன்றை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்றும், இன்றும் ஈரோடு கிழக்கு முழுக்க உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நேற்று பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 21 மாத திமுக ஆட்சியில் பல நலத்திட்டங்களை செய்து இருக்கிறோம். இரண்டாவது அலை கொரோனா ஏற்பட்ட போது 2.14 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய் வழங்கினோம்.

பிரச்சாரம்
ஆவின் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்தோம். அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் பெண்கள் 222 பயணங்களை இலவசமாக. ஈரோட்டில் மட்டும் 11 கோடி பேர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 எப்போது வழங்கப்படும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. விரைவில் அதை கொடுப்போம். ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின் 5-6 மாதங்களில் கண்டிப்பாக கொடுப்போம். நான் உறுதி அளிக்கிறேன். இந்த பிரச்சாரத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை காட்டாதது குறித்து செங்கல் ஒன்றை வைத்து உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அண்ணாமலை
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாணியில் பாஜக தலைவர் அண்ணாமலையும் செங்கல் ஒன்றை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். பாஜக தலைவர் அண்ணாமலை செய்த பிரச்சாரத்தில், திமுக ஆட்சிக்கு வந்த இந்த 21 மாதம் இருண்ட மாதம். இது விடியல் அரசு கிடையாது. வீடியோ அரசு. 21 மாதத்தில் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. ரவுடியிசம் அதிகரித்து உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க திமுக தவறிவிட்டது. அதிமுக வேட்பாளர்களை பொதுமக்கள் சந்திக்க கூடாது என்பதற்காக மக்களையே திமுகவினர் அடைத்து வைக்கும் நிலை எல்லாம் ஏற்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று பயம் இவர்களுக்கு.

தேர்தல் தோல்வி பயம்
சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். அதெல்லாம் நடக்காது. ஈரோடு கிழக்கில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இந்த வெற்றி உறுதியான வெற்றி. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை. இத்தனை மாதம் வழங்கி இருந்தால் 22 ஆயிரம் ரூபாயை பெண்கள் பெற்று இருப்பார்கள். ஆனால் திமுக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.

மோசமான ஆட்சி
உதயநிதி ஸ்டாலின் செங்கல் ஒன்றை எடுத்து சுற்றிக்கொண்டு இருக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் கட்டவில்லை என்று செங்கல்லை எடுத்து சுற்றிக்கொண்டு இருக்கிறார். இந்தியாவிலேயே 1 லட்சத்திற்கும் மேலான செங்கல்லை கொண்டு பிரதமர் மோடிதான் தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கட்டினார். இது போல எங்கும் நடந்ததே இல்லை. 11 மருத்துவ கல்லூரிகளும் கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் கட்டப்பட்டது. அந்த செங்கல்லை அமைச்சர் உதயநிதி அனுப்ப போகிறேன். திமுக கூட்டணி தலைவர்கள் சுதந்திரமாக இல்லை. அவர்கள் தங்கள் கட்சிகளை திமுகவிடம் அடகு வைத்துவிட்டனர் என்று அண்ணாமலை பிரச்சாரத்தில் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications