ம்ஹூம்.. எடப்பாடி ஆட்சி என சொல்லவே மாட்டேன்.. செங்கோட்டையன் 'அடம்'! ஓநாய் கேள்விக்கு சிவந்த முகம்!
ஈரோடு: அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் கலகக் குரல் எழுப்பியிருப்பவருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பெயரை பொதுமேடைகளிலும் செய்தியாளர்களின் சந்திப்பிலும் உச்சரிப்பதையே தவிர்த்து வருகிறார். இன்றும் அதிமுக ஆட்சி அமையும் என்று மட்டுமே செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவர் கே.ஏ.செங்கோட்டையன். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் கோலோச்சியவர் செங்கோட்டையன். சசிகலாவின் தீவிர விசுவாசி. எடப்பாடி பழனிசாமி முதல்வரான போதும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் குருநாதரும் செங்கோட்டையன்தான்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற சசிகலாவின் குரலை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் செங்கோட்டையன். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கான பாராட்டு விழாவை புறக்கணித்து பகிரங்கமாக அதிமுகவில் கலகம் செய்தார் செங்கோட்டையன். இதன் பின்னர் செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதா நினைவு நாள் என்றால் அனைவரும் சென்னையில் ஒன்று கூடி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவோம்; ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதால் பொதுமக்களிடத்திலும் தொண்டர்களிடமும் ஆர்வத்தை உருவாக்க அந்தந்த பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்; அதிமுகவின் ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம் என்றார்.
அப்போது, அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என கூறும் நிலையில் அவரது பெயரை சொல்லாமல், அதிமுக ஆட்சி அமைப்போம் என்று மட்டுமே கூறுகிறீர்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த கேள்விக்கு எந்த பதிலும் தராமல் விருட்டென நகர்ந்துவிட்டார் செங்கோட்டையன். மேலும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு பின்னர் தமக்கு பக்க பலமாக- ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் நிர்வாகிகளை தமக்கு பின்னால் அழைத்து வந்து நிற்க வைத்தார் செங்கோட்டையன்.
மேலும் ஆடு- ஓநாய் என எடப்பாடி பழனிசாமி துரோகிகள் குறித்து பேசியது பற்றிய கேள்விக்கும் முகம் சிவந்த செங்கோட்டையன், அதெல்லாம் அவங்க கிட்ட கேளுங்க எனவும் கடுகடுத்தார்.
அதிமுகவில் செங்கோட்டையன் நடத்தி வரும் இந்த மவுனமான கலகக் குரல் எப்போது பூதாகரமாக வெடிக்குமோ? என்பது அக்கட்சியினரின் தவிப்பாக இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications