ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! இதென்ன அக்கப்போர்! கை சின்னத்துக்கு எம்ஜிஆர் வேடத்தில் ஓட்டு வேட்டை!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு பிரச்சாரக் களம்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் களம் அனல் பறக்கும் நிலையில், எம்.ஜி.ஆர்.வேடமணிந்த ஒருவர் கை சின்னத்துக்கு ஓட்டுக்கேட்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் திமுக சிறுபான்மை பிரிவை சேர்ந்த ஜே.எம்.பஷீர்.
உங்க அக்கப்போருக்கு ஒரு அளவேயில்லையா என்பது போல் தான் அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர். வேடமணிந்த நபரை வைத்து கை சின்னத்துக்கு எப்படி ஓட்டுக் கேட்கலாம் எனக் கேட்டு பஷீரை அதிமுகவினர் ரவுண்டு கட்டி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு 17 நாட்களில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

அமைச்சர்கள் டீம்
ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றிபெற வைப்பதற்காக மொத்த அமைச்சர்களும் தங்கள் பணிகளை விட்டுவிட்டு ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வரும் நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். அந்த வகையில் ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தேசியத் தலைவர் திரைப்படத்தின் ஹீரோ ஜே.எம்.பஷீர், எம்.ஜி.ஆர். வேடமணிந்த ஒருவரை தன்னுடன் அழைத்துச் சென்று கை சின்னத்துக்கு ஓட்டுக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். வேடம்
அதுமட்டுமல்லாமல் தனது ஆதரவு எப்போதுமே ஸ்டாலினுக்கு தான் என்றும் தனக்கு நிகராக ஸ்டாலின் தற்போது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என எம்.ஜி.ஆர். பேசுவதை போல் அவரது தோற்றத்தில் உள்ளவரை வைத்து பரப்புரை செய்து வருகிறார். இதனிடையே எம்.ஜி.ஆர். வேடமணிந்த நபரை வைத்து கை சின்னத்துக்கு எப்படி ஓட்டுக்கேட்கலாம் எனக் கேட்டு ஜே.எம்.பஷீரை அதிமுகவினர் ரவுண்டு கட்டி வருகின்றனர். இதற்காக வழக்கும் தொடருவோம் என கூறியிருக்கின்றனர்.

கெட் அப் சேஞ்ச்
உங்க அக்கப்போருக்கு ஒரு அளவு வேண்டாமா என்பது போல் தான் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. இதேபோல் கருணாநிதி, அண்ணா, ஸ்டாலின், விஜயகாந்த், போன்றோரின் கெட் அப்களில் வேடமணிந்து அவர்களது சாயல்களில் உள்ளவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications