டென்ஷன் பண்ணாதீங்க! அமைச்சர் முத்துசாமியை வர சொல்லுங்க! போதையில் போலீசிடம் எகிறிய நபர் - பரபரப்பு
ஈரோடு: ஈரோட்டில் குடிபோதையில் பைக் ஓட்டி போலீசாரிடம் இளைஞர் ஒருவர் சிக்கிய நிலையில் அவர், ‛‛டென்ஷன் பண்ணாதீங்க.. அமைச்சர் முத்துசாமி(மதுவிலக்கு துறை) அண்ணனை வரச்சொல்லுங்கள்' என ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மேற்கு தொகுதி திமுக எம்எல்ஏவான முத்துசாமி முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் வீட்டு வசதி துறையை நிர்வகித்து வருகிறார். சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் இருந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை பறிக்கப்பட்டது.

இதில் மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை என்பது அமைச்சர் முத்துசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அவர் டாஸ்மாக்கில் கூடுதலாக விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் தான் குடி போதையில் அமைச்சர் முத்துசாமியை சம்பவ இடத்துக்கு வர வழைக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஈரோட்டில் பந்தல் அமைத்து சேர்கள் போடப்பட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த வேளையில் இளைஞர் ஒருவர் மதுபானம் குடித்து மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். இதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த நபர் போலீசாரிடம் விசாரிக்க முயன்றனர்.
அப்போது அந்த இளைஞர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து போலீசார் ஓரமாக வரும்படியும், பைக்கை தருவதாகவும் கூறினார்கள். ஆனால் போதை இளைஞர், ‛‛முத்துசாமி(அமைச்சர் முத்துசாமி) அண்ணனை இங்கே வரச்சொல்லுங்க'' என பட்டென கூறுகிறார். இதை கேட்ட போலீசார் அவர் ‛‛மீட்டிங்கில் இருக்கிறார்'' என கூறினர்.

இதை கேட்ட அந்த இளைஞர், ‛‛மீட்டிங்கில் இருந்தால் என்ன.. நானும் ஒரு வாக்காளர்ங்க.. நானும் ஓட்டளிக்கிறேன்'' என்கிறார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ‛‛தேர்தல் வரும்போது அதுபற்றி பேசி கொள்ளுங்கள்'' எனக்கூற அந்த நபர், ‛‛2024ல் தேர்தல் வருகிறது. அப்போது நான் பேசுகிறார். இப்போது என் வண்டியில் இருந்து எவன் சாவியை எடுத்தான். அவனை கொடுக்க சொல்லுங்கள்'' என கூறினார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் சாவியை கொடுத்து ‛‛தள்ளி கொண்டு செல்லுங்கள்'' என கூறினார்கள். ஆனால் அதற்கு உடன்படாத இளைஞர், ‛‛இது என் வண்டி.. என் வண்டியை ஓட்டாதனு சொல்ல நீ யார்? எனக்கு டிரைவிங் லைசென்ஸ் கொடுத்து இருக்காங்க.. நான் வண்டியை தள்ளிட்டு போவேன். ஓட்டிட்டு போவேன். இல்லாவிட்டால் உருட்டிட்டுபோவேன்.. இங்கே படித்து.. இங்கே கிடப்பேன்.. டென்ஷன் படுத்தக்கூடாது'' என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications