மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின் தடை ஏற்பட்டது ஏன்? கதர் துறை அமைச்சர் விளக்கம்
ஈரோடு: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வந்த போது மின்வெட்டு ஏற்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆப் ஈரோடு சென்ட்ரல் சார்பில் ஈரோடு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாலிபால் போட்டி ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதனை, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தமிழக கைத்தறி துணி நூல் துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய பாலாஜி கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டியைத் துவக்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் மா விஜய் பாலாஜி கூறியிருப்பதாவது: வரும் நவம்பர் 3-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஈரோட்டிற்கு வருகை தந்து, சுமார் 10 முதல் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏறத்தாழ 4,000 பேருக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆய்வுப் பணிகள் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசு மீது ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளைக் கூற முடியாத காரணத்தால், எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
குடியரசுத் துணைத் தலைவர் வருகையின்போது ஏற்பட்ட மின்தடை திட்டமிட்டது அல்ல; தவிர்க்க முடியாத ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அது ஏற்பட்டது.
மக்கள் அரசின் மீது முழு திருப்தியுடன் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இதனைப் பெரிதுபடுத்தி வருகின்றன. கடந்த ஆட்சியில் கஜானா எந்த அளவுக்குக் காலியாக வைக்கப்பட்டுச் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும், அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவே அரசு நிதி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வரும் காலங்களில் நிதி நிலைமையைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னாள் அமைச்சர்கள் மீதான கைது நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, போதிய ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் இருப்பதாலேயே சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தவறு செய்யாதவர்கள் எதற்காக நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த காலங்களை விட தற்போது விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவின்படியும், பருவமழைக் காலத்தில் உறுதித்தன்மையற்ற கட்டடங்களால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகவுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் பட்டா தொடர்பான கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும். நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்களுக்குப் பணம் எதுவும் கொடுக்காமல், மக்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.
அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் விரக்தியடைந்தவர்களே பெண்களைப் பற்றியும், அரசு குறித்தும் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
