முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல்! ஈரோட்டில் பதுங்கியிருந்த நாம் தமிழர் கட்சி ஞானசேகரன் கைது!
ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஞானசேகரன் கைது.
ஈரோடு: முதலமைச்சர் ஸ்டாலினை எரிப்போம் எனக் கூறி பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சி ஞானசேகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருந்ததியினர் சமுதாயம் தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்து குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய ஞானசேகரன் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதனிடையே அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஈரோட்டில் வைத்து ஞானசேகரனை கைது செய்தனர்.

அருந்ததியினர் சமுதாயம்
அருந்ததியின சமுதாயத்தினர் குறித்து சீமான் பேசிய கருத்து ஒன்று மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய வேண்டும் என அவரது எதிர்தரப்பினர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சீமான் மீது எப்படி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று மிகுந்த ஆவேசமாக உணர்ச்சிவசப்பட்டு பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஞானசேகரன் ஸ்டாலினை எரிப்போம் எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

முதல்வருக்கு கொலைமிரட்டல்
முதலமைச்சரை எரிப்போம் எனக் கூறி பொதுவெளியில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த ஞானசேகரனை கைது செய்ய வேண்டும் என திமுகவினர் கொந்தளிக்கத் தொடங்கினர். இதையடுத்து இவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஞானசேகரனை 2 நாட்களாக தேடி வந்தனர். அதில் அவர் ஈரோட்டில் பதுங்கியிருக்கும் தகவல் அறிந்து இன்று கைது செய்தனர். உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் இன்று சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மிகுந்த கவனம் தேவை
இதனால் தான் பொதுவெளியில் பேசும் போது அது யாராக இருந்தாலும் மிகுந்த கவனமுடன் பேச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சட்ட உதவிகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஞானசேகரன் திட்டமிட்டு இவ்வாறு கூறவில்லை என்பதும் ஆதங்கத்தால் பேசினார் என்பதும் அவர் தரப்பு வாதமாக உள்ளது.

திமுகவினர் பதிவு
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஞானசேகரன் கைதை திமுகவினரும், திமுக ஆதரவு சமூக வலைதளவாசிகளும் தங்கள் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications