'மாஸ்க்கை கழட்டுங்க'.. உதய சூரியன் சின்னத்துடன் வாக்களிக்க வந்த.. திமுக வேட்பாளரை கண்டித்த போலீசார்
ஈரோடு: மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் அணிந்து வந்திருந்த மாஸ்க்கில் உதயசூரியன் சின்னம் இருந்ததால் அவரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க அங்கிருந்த காவலர் மறுத்துவிட்டார்.
தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்தச் சட்டசபை தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாகு அறிவித்திருந்தார். மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் மட்டும் மிகச் சிறிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார். அவர் மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று வாக்களிக்க வந்தார்.
கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகளில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்காளர்களும் மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்து. இருப்பினும் சுப்புலட்சுமி ஜெகதீசன் அணிந்து வந்த வெள்ளை நிற மாஸ்க்கில் உதயசூரியன் சின்னத்துடன், '2021 வெல்லும் திமுக' என்று எழுதப்பட்டிருந்தது.
இதனால் வாக்குச்சாவடியில் இருந்த போலீசார் ஒருவர் அவரை உள்ளே விட மறுத்துவிட்டார். மேலும், அங்கு இருந்த நீல நிற மாஸ்க்கையும் வழங்கினார். அதை அணிந்த பின் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஓட்டுப்போட்டுவிட்டுச் சென்றார். இதனால் அங்குச் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஓட்டுச்சாவடி மையத்துக்குள் கட்சிக் கொடி மற்றும் சின்னம் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி உள்ளது.