இந்த கொடுமை எங்காவது நடக்குமா? ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்.. பிரசாரத்திலேயே பொங்கிய பிரேமலதா
மக்களை ஆடு மாடு போல் அடைத்து வைத்துள்ளனர் என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்துக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நேற்று ஈரோடு வீரப்பன் சத்திரம், திருநகர் காலனி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தேமுதிகவுக்கு புதிதல்ல
அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிகவிற்கு புதிதல்ல. 2011-ல் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்ற தொகுதி இது. கட்சி துவங்கப்படும் என்று பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் தான் கேப்டன் அறிவித்தார். ஈரோட்டில் இலவச மருத்துவமனை அமைத்து மக்கள் சேவையாற்றியவர் கேப்டன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றாம் எண் பெத்தானை அழுத்தி முரசு சின்னத்தில் வாக்களித்து எஸ்.ஆனந்தை வெற்றி பெற வைத்து சரித்திரத்தில் இடம் பிடிக்க வைக்க வேண்டும்.

சொன்னார்கள் - செய்தார்களா?
மக்களை வஞ்சிக்கக் கூடியவர்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்கள், 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுகிறார்கள். டாஸ்மாக் கடைகளை ஒழிப்போம் என்றார்கள் ஒழித்தார்களா? நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கித் தருவோம் என்றார்கள் செய்தார்களா? பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கொடுப்பேன் என்றார்கள் கொடுத்தார்களா? விவசாயிகளின் விலை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வோம் என்று கூறினார்கள் செய்தார்களா? விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்கள் செய்தார்களா?

ஒரே குட்டையில் ஊறிய மட்டை
இந்த ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி, நூல் விலை, பால் விலை என அடிப்படை பொருட்களின் விலையெல்லாம் உயர்ந்துள்ளது. ஆட்சியாளர்கள்வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. துறை சார்ந்த பணிகளை கைவிட்டுவிட்டு, ஈரோட்டில் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் திமுக, அதிமுக மாறி மாறி குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான். பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் இந்த தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்.

தேர்தலை நிறுத்த வேண்டும்
நல்ல திட்டங்களை எல்லாம் திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள். மக்களை ஆடு மாடு போல் அடைத்து வைத்துள்ளனர். மக்களை அடிமைகள் போல நடத்துவது வேறு எந்த தேர்தலிலும் நடைபெறவில்லை. இதை மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கிற்கு நேரில் வந்து பார்த்து இந்த இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications