ஈரோடு அரசு மருத்துவமனையை ஆடிப்போக வைத்த வீடியோ.. உடனே நடந்த விசாரணை.. பறந்த ஆர்டர்
ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்ததாக வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து அந்த ஒப்பந்த பணியாளரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனை ஆகும். இங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இங்கு, நரம்பியல் பிரிவு, இருதய நோய் பிரிவு, கண் அறுவை சிகிச்சை, புற்றுநோய், பிளாஸ்டிக் சிகிச்சை, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை என பல்வேறு உயர் சிகிச்சைகள் அளிக்கும் வசதிகள் உள்ளன. எனினும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குறைபாடு காரணமாக உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்படுவதாக புகார்கள் உள்ளது.

இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் சுத்தம் செய்வதற்காக வரும் தூய்மை பணியாளர்கள், நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வது, ட்ரிப்ஸ் போடுவது போன்ற பல்வேறு பணிகளிலும் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆண்கள் சிகிச்சை பெற்று வரும் வார்டில் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவர் நோயாளிக்கு குளுக்கோஸ் பாட்டிலை மாற்றிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. , இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக வெளியான வீடியோ அடிப்படையில் ஒப்பந்த தூய்மை பணியாளர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அரசு மருத்துவமனையில் ஒப்பந்த சுகாதார பணியாளர்களுக்கு நோயாளிகளுக்கு டிரிப்ஸ் இறக்க அனுமதி இல்லை. எனினும் இது போன்ற செயல்களை தூய்மை பணியாளர்கள் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications