நயினார் நாகேந்திரன் எங்கே போட்டியிட்டாலும் தவெக டெபாசிட் வாங்க விடாது.. செங்கோட்டையன் சூளுரை!
ஈரோடு: ஒரு வார்டில் கூட தவெக வெல்ல முடியாது என்று கூறும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எங்குப் போட்டியிட்டாலும் அவரை தவெக டெபாசிட் வாங்க விடாது என்று செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என்று கூறிய செங்கோட்டையன், தவெக தலைவர் தம்ழிநாட்டின் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவார் என்றும் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்த பின், அவர் மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் செங்கோட்டையன் கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு கிராமத்தில் கட்சி நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.

அதேபோல் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் தவெக பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான பணிகளையும் செங்கோட்டையன் தீவிரமாக செய்து வருகிறார். இதனால் கொங்கு மண்டல தவெக உற்சாகமாகி இருக்கிறது. அதேபோல் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளையும், இளைஞர்களையும் தவெக பக்கம் இழுத்து வருகிறார்.
இது அதிமுக மற்றும் திமுகவுக்கு கூடுதல் சிக்கலாகி இருக்கிறது. இதனிடையே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்று தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். அதேபோல் விஜய்யை நேரடியாக முதல்வராக நினைக்கிறார் என்றும் விமர்சித்திருந்தார். இதனை நயினார் நாகேந்திரன் அனைத்து பேட்டிகளிலும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் பேச்சு தவெக தரப்பைக் கோபமடைய செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செங்கோட்டையன் பேசுகையில், பாஜகவின் நயினார் நாகேந்திரன் நம்மைப் பார்த்துப் பேசி இருக்கிறார். அவர் எங்கெங்கு சென்றார், எத்தனை தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்..
ஆனால் இன்று தவெகவை பார்த்து நயினார் நாகேந்திரன் சவால்விடுகிறார்.. ஒரு வார்டில் கூட தவெகவால் வெல்ல முடியாது என்கிறார்.. நான் சொல்கிறேன்.. நயினார் நாகேந்திரன் எங்குப் போட்டியிட்டாலும், அவரை டெபாசிட் இழக்கச் செய்வதில் தான் தவெகவின் வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வகையில் பணியாற்ற வேண்டும். யார் நம்மைத் தவறாகப் பேசுகிறார்களோ, அவருக்கு இளைஞர்களான நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
எனக்குத் தெரியும்.. நயினார் நாகேந்திரன் எந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்று தேடிக் கொண்டே இருப்பார்.. ஆனால் தவெக தலைவர் விஜய் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவார்.. 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என்று தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் இந்த பேச்சு தவெகவினர் மத்தியில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications