யார் அந்த துரோகிகள்? கோபியில் செங்கோட்டையன் பேனரை பார்த்தீங்களா? எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்?
ஈரோடு: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்திற்கு இணையாக செங்கோட்டையனின் படமும் இடம்பெற்றிருந்த கூட்டத்தில் "என்னை சோதிக்காதீர்கள்" என அவர் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். பொதுவாக இது போன்ற விழாக்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமி படம் சிறியதாகவும் அதைவிட சிறியதாக செங்கோட்டையன் படம் இருக்கும்.

ஆனால் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் படம் இருக்கும் அதே சைஸில் செங்கோட்டையனின் படம் இருந்தது கவனிக்கத்தக்கதாக இருந்தது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில், நமது கழகச் செயலாளர் கட்டளையின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தேர்தல் காரணமாக இந்த கூட்டம் தாமதமாக நடைபெறுகிறது.
சொல்றதுக்கு ஒன்றுமில்லை: நான் எத்தனை ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். எத்தனை தலைவர்களை சந்தித்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தால் எதுவும் கிடைக்காது. இந்தக் கூட்டத்தில் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.
சிக்கமாட்டேன்: என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் செல்கிறவன், அந்த தெய்வங்கள்தான் நமது வழிகாட்டிகள். அவர்கள் இருவரும் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இருக்க முடியாது. அதிமுக தொடங்கப்பட்ட போது நான் சாதாரண தொண்டன்.
14 முறை எம்ஜிஆருடன்: அதிமுக தொடங்கப்பட்ட போது நான் சாதாரண தொண்டன். அப்போது எனக்கு பொருளாளர் பதவியை எம்ஜிஆர் வழங்கினார். எம்ஜிஆரோடு 14 முறை நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். தமிழகம் முழுவதும் கிராமம் வாரியாக உள்ள அத்தனை நிர்வாகிகள் பெயரும் எனக்குத் தெரியும்.
ஜெயலலிதா படம் இல்லை: அத்திக்கடவு- அவிநாசி திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை. இதன் பிறகு எத்தனையோ சொல்கிறார்கள். என் வீட்டிற்கு நான் கேட்காமலேயே போலீஸ் பாதுகாப்பு போட்டார்கள். அதை பற்றி எனக்கு கவலையில்லை.
என்னை சோதிக்காதீர்கள்: என்னை பொருத்தவரை நேர்மையான பாதையில் தன்னலம் கருதாமல் நான் பாடுபடுகிறேன். ஏற்கெனவே எனக்கு வாய்ப்பு வந்த போது அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இதை மறந்து என்னை சோதிக்காதீர்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
விசுவாசி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரலைக் காட்டினால் அதற்கான காரணத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறேன். "எதை கொடுத்தாலும் வெற்றிகரமாக செய்து முடிக்கக் கூடியவர், விசுவாசமானவர் செங்கோட்டையன் என ஜெயலலிதாவே என்னை பாராட்டியுள்ளார். நான் தொண்டனாகவே பணியாற்றக் கூடியவன். என்றுமே தலைவராக ஆசைப்பட்டதில்லை.
யார் அந்த துரோகிகள்: திமுக ஆட்சியில் பல்வேறு சோதனைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். எனவே தொண்டர்களோடு தொண்டராக இருந்து நான் பணியாற்றி மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம். சில துரோகிகளால் நாம் தேர்தலில் தோற்றோம். அவர்களை அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் என செங்கோட்டையன் பரபரப்பாக பேசியிருந்தார். இதையடுத்து யார் அந்த துரோகிகள் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications