சீனே மாறிப்போச்சு.. எடப்பாடி பழனிசாமிக்கு சரிசம அளவில் செங்கோட்டையன் படம்! கவனிக்க வைத்த பேனர்!
ஈரோடு: அதிமுக பொதுக்கூட்ட மேடையில் உள்ள பேனரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்தின் அளவுக்கு சம அளவில் செங்கோட்டையனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அண்மையில் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்வை புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் காட்சிகள் மாறி உள்ளன.
அதிமுக பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியமைக்காக அன்னூர் கஞ்சப்பள்ளியில் கடந்த 9 ஆம் தேதி நடந்த பாராட்டு விழாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை எழுப்பி இருப்பதோடு அரசியல் களத்திலும் விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது.

"எங்களை உருவாக்கிய தலைவர்களான எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்கள் அழைப்பிதழிலும், மேடையிலும் இல்லாததால், என் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், இந்த விழாவில் பங்கேற்கவில்லை" என்று கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதோடு, சென்னையில் நடந்த டெல்லி அதிமுக அலுவலக திறப்பு விழா நிகழ்விலும் பங்கேற்காமல் தலைமைக்கு எதிரான தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அமைதியின் சொரூபமாக இருந்த செங்கோட்டையன் தனது இந்த நடவடிக்கைகள் மூலம் கட்சி தலைமைக்கு எதிராக தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளாரா என்பது அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை முன் நிறுத்தி, செங்கோட்டையன் எழுப்பியிருக்கும் இந்தக் குரல் பெரிய அளவில் விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது.
ஆனால், கட்சி சார்பாக நடத்தப்பட்ட விழாவாக இல்லாததால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம்பெறவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருந்தார். எனினும், எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த பரபரப்பான சூழலில் ஈரோட்டில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் பரவியது. குறிப்பாக, அவரது வீட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததால், இது போன்ற தகவல் பரவியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது வீட்டில் ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். "என்னை சந்திக்க தினமும் 100 அல்லது 200 நபர்கள் வருவது வாடிக்கை தான். அதற்காக, ஆலோசனை கூட்டம் நடத்துவதாக கூறுவதா? தனியாக எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தப்படவில்லை" என அவர் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இன்று அதிமுக சார்பில் எம்.ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த விழா மேடையில் இடம்பெற்றுள்ள பேனர் கவனம் பெற்றுள்ளது.
காரணம், இந்த பேனரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்தின் அளவுக்கு சம அளவில் செங்கோட்டையனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அண்மையில் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்வை புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் பேனரில் செங்கோட்டையன் படத்தின் அளவு பெரிதாகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications