துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ரயில் கொள்ளை..வடமாநில கும்பல் அட்டகாசம்..பயணிகள் பீதி
Recommended Video
ஈரோடு: ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற ரயில்களில், நள்ளிரவில் வடமாநில கும்பல் மீண்டும் கொள்ளையடித்து விட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே மாவேலிபாளையம் என்ற இடத்தில் வடமாநில கும்பல் மீண்டும் ரயிலில் கொள்ளையை அரங்கேற்றியுள்ளது. ஈரோடு சேலம் பாதையில் அமைந்துள்ள மாவேலிபாளையம் - மகுடஞ்சாவடி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் 20 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை சாதகமாக பயன்படுத்தி இரு நாட்களுக்கு முன் 4 ரயில்களில் வடமாநில கும்பல் ஒன்று அடுத்தடுத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டது.
ரயில் பயணிகள் 10 பேரிடம் சுமார் 30 சவரன் நகைகளையும், உடமைகளையும் கொள்ளையடித்து விட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஆனால் பலத்த பாதுகாப்பையும் மீறி மீண்டும் அதே இடத்தில் அதிகாலையில் வடமாநில கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு சென்ற ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மற்றும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களில், நள்ளிரவு 1 மணியளவில் ஏறிய கொள்ளையர்கள் பயணிகளிடமிருந்து 7 சவரன் நகைகளை பறித்து கொண்டு, ரயில் மெதுவாக சென்ற போது கீழே இறங்கி ஓடினர்.
மாவேலிபாளையத்தில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸார் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, அவர்கள் மீது கற்களை வீசி தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை நியமிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரயில்களில் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள், இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications