"மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் வார்த்தைகளை அரசியல் சாசனத்திலிருந்து நீக்கணும்!" சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
டெல்லி: நமது அரசியல் சாசன முகவுரையில் இருந்து மதச்சார்பற்ற (Secular) மற்றும் சமதர்ம (Socialist) ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் மதச்சார்பற்ற என்ற இரு வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்தியாவின் அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தில முக்கிய கேள்விகளை எழுப்பினர்.

வழக்கு: அதாவது நமது அரசியல் சாசன முகவுரையில் இருந்து மதச்சார்பற்ற (Secular) மற்றும் சமதர்ம (Socialist) ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி மற்றும் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் திருத்தம் செய்ய முடியுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கேள்வி: இந்த வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதி. "நமது நாட்டின் அரசியல் சாசனம் 1949 நவ. 26ஆம் தேதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தேதியை வைத்துக்கொண்டு முகவுரையில் திருத்தம் செய்ய முடியுமா? முடியும் என்றால் அதில் பிரச்சினை இல்லை" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி, "இந்த துல்லியமான கேள்விக்காகவே வழக்கு தொடர்ந்துள்ளோம்" என பதிலளித்தார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும் கூறுகையில், "நான் இதுவரை பார்த்த அரசியல் சாசன முகவுரைகளில் தேதியுடன் வரும் முகவுரையாக நமது அரசியலமைப்பு முகவுரை தான் இருக்கிறது. இந்த அரசியலமைப்பை நாம் ஏற்றுக் கொண்ட போது முதலில் இந்த இரண்டு சொற்கள் (சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற) இல்லை.. இந்திய அரசியலமைப்பின் முகவுரை ஒரு குறிப்பிட்ட தேதியுடன் வருகிறது, எனவே அதை விவாதம் இல்லாமல் திருத்த முடியாது" என்றார்.
வாதம்: அப்போது சுப்பிரமணிய சுவாமி தரப்பு, "42வது திருத்தச் சட்டம் எமர்ஜென்சி காலத்தில் (1975-77) நிறைவேற்றப்பட்டது" என்றார். அதாவது நாட்டில் எமர்ஜென்சி காலம் அமலில் இருந்த போது தான் சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற ஆகிய வார்த்தைகள் அரசியலமைப்பின் முகவுரையில் சேர்க்கப்பட்டது என்பதே சுப்பிரமணிய சுவாமியின் வாதமாகும். இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் தேவை என்று கூறிய நீதிபதிகள், இரு மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சுப்பிரமணியன் சுவாமி மற்றும் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இந்திய அரசியல் சாசன முகவுரையில் இருந்து "சோசலிஸ்ட்" மற்றும் "மதச்சார்பற்ற" வார்த்தைகளை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 1976இல் ஏமர்ஜென்சி அமலில் இருந்த போது இந்திரா காந்தி அரசால் கொண்டு வரப்பட்ட 42வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அரசியலமைப்பின் முகவுரையில் 'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' வார்த்தைகள் சேர்க்கப்பட்டது.
அப்போது தான் முகவுரையில் இந்தியாவை "இறையாண்மை, ஜனநாயக குடியரசு" என்பதிலிருந்து "இறையாண்மை, சோசலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு" என்று மாற்றப்பட்டது. அரசியல் சாசன முகவுரையை மாற்றவே முடியாது என்ற போது அதை மாற்றியது செல்லாது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்பதே சுப்பிரமணியன் சுவாமியின் வாதமாகும்.












Click it and Unblock the Notifications