கிடுகிடுவென ரூ.65 வரை உயர்ந்த சர்க்கரை விலை.. டீ, காபி விலை ஏறும் அபாயம்! மத்திய அரசு முக்கிய தகவல்
ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் அரிசி விலையை தொடர்ந்து தற்போது சர்க்கரை விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காபி - டீ விலையும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.. மத்திய அரசு எத்தனால் பெட்ரோல் அறிமுகம் செய்துள்ள நிலையில் எத்தனால் உற்பத்தியில் கவனம் செலுத்துவதால் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரோடு மாவட்ட கரும்பு ஆலைகளில் இருந்து 50 கிலோ மூட்டைகளாக அனுப்பப்படும் சர்க்கரை, கடந்த வாரம் வரை கிலோ ரூ.45-க்கு விற்ற நிலையில், ஒரே வாரத்தில் மொத்த விலையில் ரூ.60-க்கும், சில்லறை விலையில் ரூ.65-க்கும் விற்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், வெள்ளை சர்க்கரையுடன் சேர்த்து நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தின் விலையும் கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரித்து நுகர்வோரை கவலை அடையச் செய்துள்ளது.

எத்தனால் மத்திய அரசு மறுப்பு
இந்நிலையில், நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்காக கரும்பு திசை திருப்பப்படுவதே காரணம் என்ற குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. சர்க்கரை ஆலை உரிமையாளர்களே தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா இதுகுறித்து நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்..
"சர்க்கரை விலை உயர்வுக்கும் எத்தனால் தயாரிப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கடந்த 2022-23 ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட சர்க்கரையின் அளவு சுமார் 12 சதவீதமாக இருந்தது, ஆனால் இப்போது அது 9 சதவீதமாகக் குறைந்துவிட்டது..
சர்க்கரை விலை உயர்வுக்கு காரணம்
அதுமட்டுமல்லாமல், இப்போது தேவைப்படும் எத்தனாலில் கிட்டத்தட்ட 4-ல் 3 பங்கு மக்காச்சோளம் போன்ற தானியங்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது..
கரும்பு பயிர்களை தாக்கிய சிவப்பு அழுகல் மற்றும் நுனி துளைப்பான் நோய்கள் மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சர்க்கரை உற்பத்தி கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.. நடப்பு சந்தை ஆண்டில் சர்க்கரை உற்பத்தி ஆரம்ப மதிப்பீடான 343 லட்சம் டன்களிலிருந்து குறைந்து 306 லட்சம் டன்களாக மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், நாட்டின் உள்நாட்டுத் தேவைக்குத் தேவையான சர்க்கரை இருப்பு தாராளமாகவே உள்ளது
பதுக்கல், கள்ளச்சந்தை
சில்லறை சந்தையில் சர்க்கரை விலை கிலோ ரூ.48-ல் இருந்து ரூ.56 வரை உயர்ந்துள்ளது.. குறிப்பாக கடந்த 7 முதல் 10 நாட்களுக்குள் ஆலை வாயில் விலை கிலோ ரூ.47-48 என்ற நிலையிலிருந்து திடீரென ரூ.62 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இப்படியான திடீர் விலை ஏற்றம் முற்றிலும் நியாயமற்றது.. பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், அக்டோபர் 31-க்குள் 10 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.. டீலர்கள் மற்றும் மொத்த நுகர்வோர் கையிருப்பு மீதான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
டீ காபி விலை உயருமா
மத்திய அரசு இந்த விளக்கத்தை தந்தாலும், தற்போதைக்கு சர்க்கரை விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.. டீ கடைகளில் டீ, காபி விலையும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.. இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் டீ, காபி முக்கிய இடம் பிடித்துள்ளது. தினமும் குறைந்தது 2 முறையாவது டீ அல்லது காபி குடித்து விடுவார்கள். ஆனால் சர்க்கரையின் விலை வேகமாக உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல இனிப்பு, பேக்கரி தொழில்களையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இனிப்புகள், பிஸ்கட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி, விலை கணிசமாக உயர்த்தப்பட்டது,.. ஓட்டல்களிலுள்ள மெனுக்களும் குறைக்கப்பட்டன.. இப்போது சர்க்கரை தட்டுப்பாடு காரணமாக மீண்டும் டீ, காபி விலை ரூ20, ரூ25 என உயரக் கூடும் என்கிற தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது...!!


Click it and Unblock the Notifications
