ஈரோட்டில் இன்று ஆடைகள் வாங்க அதிகாலையிலேயே குவிந்த பொதுமக்கள்.. தீபாவளிக்கு மறுநாளில் பெரும்கூட்டம்
ஈரோடு: ஈரோடு மாநகரில் தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளான இன்று அதிகாலையே ஏராளமான பொதுமக்கள் ஜவுளிக்கடைகளின் முன்பு குவிந்துள்ளனர். ஒரே ஒரே நேரத்தில் பல கடைகளில் தள்ளுபடி சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கூட்டம் ஈரோடு மாநகரில் அதிகாலையிலேயே அலை மோதியுள்ளது. ஈரோட்டை பொறுத்தவரை தீபாவளிக்கு மறுநாள் தள்ளுபடி விற்பனை அறிவிப்பு நடைபெறுவது வழக்கம். அதனை வாங்க அதிகாலையே மக்கள் குவிந்துவிடும் வழக்கமாக இருக்கிறது.
ஈரோடு மாநகரம் இந்தியாவிலேயே ஜவுளி வணிகத்திற்கு மிகவும் புகழ்பெற்ற பகுதியாகும். ஈரோடு என்றால் மஞ்சள் என்பார்கள். அதனைவிடவும் புகழ் பெற்றது இங்குள்ள ஜவுளி சந்தை. ஈரோட்டில் ஏராளமான ஜவுளி தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து உற்பத்தியாகும் ஆடைகள் பல இந்தியா முழுக்க விற்பனையாகிறது. வடமாநில வியாபாரிகள் பலர் ஈரோட்டில் இருந்து தான் துணிகளை வாங்கி சென்று விற்பனை செய்வார்கள். ஜவுளிக்கு குஜராத்தில் சூரத் என்றால், தமிழ்நாட்டில் ஈரோடு மிகவும் பிரபலன நகரமாகும்.

ஈரோட்டை பொறுத்தவரை சற்றே வித்தியாசமான பழக்கங்களை கொண்டுள்ளது. ஈரோட்டை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாள் தள்ளுபடி வழங்கப்படுவது வழக்கம். பல்வேறு ஜவுளிக்கடைகள் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை அறிவிப்பதை ஒருவழக்கமாகவே வைத்துள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டும் 10-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் பல்வேறு ஆடைகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்திருக்கின்றன.
இதனால தீபாவளிக்கு முன்பாக புத்தாடைகள் வாங்கத் தவறியவர்கள் பலர் இன்று ஆர்வமுடன் ஜவுளிக்கடைக்கு சென்றனர். அதேபோல் தள்ளுபடி விலையில் ஆடைகளை வாங்க ஆர்வம் காட்டிய பொதுமக்களும் இன்று கிளம்பி சென்றனர். இதனால், ஈரோட்டின் பிரதான வணிக சாலைகளில் , கடைகள் திறப்பதற்கு முன்பே அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேரம் செல்லச் செல்ல வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
தீபாவளி மறுநாள் தள்ளுபடி விற்பனை ஈரோட்டில் ஆண்டுதோறும் மிகப்பெரிய வணிகமாக இருந்து வருகிறது. மக்கள் போட்டி போட்டு ஜவுளிகளை வாங்கி குவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
