பாஜகவுடன் கூட்டணி... ஐக்கிய ஜனதா தளம் போல்... அதிமுகவும் பலவீனமாகும் -தமிமுன் அன்சாரி
ஈரோடு: பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவின் நிலைமை ஐக்கிய ஜனதா தளம் போல் பலவீனமடையும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக அதிமுக தொண்டர்கள் தான் கவலைப்பட வேண்டுமே தவிர தாங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை எனத் தெரிவித்தார்.

தமிழக மக்களின் மனநிலைக்கு எதிரான முறையில் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக சாடிய தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., மஹாராஷ்டிரா மற்றும் பீகார் அரசியல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டிப் பேசினார். தங்கள் கொள்கைப் பங்காளியாக திகழ்ந்த சிவசேனாவுக்கே மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இடையூறு செய்தவர்கள் பாஜகவினர் எனக் கூறினார்.
மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமார் கட்சி பலவீனமானதை போல் அதிமுகவும் ஆகக் கூடும் என்றார். சில மாதங்களுக்கு முன்பு வரை கழகங்கள் இல்லாத தமிழகம் என்று முழங்கி வந்த பாஜக இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே அதிமுக கூட்டணிக்கு தனது கட்சியின் ஆதரவு இல்லை எனக் கூறியிருந்தார் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரது நிலைப்பாடு குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications