திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் வேல்முருகன்? தமிழக வாழ்வுரிமைக் கட்சியை குறிப்பிடாத ஸ்டாலின்!
திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் வேல்முருகன்?
ஈரோடு: ஈரோட்டில் நேற்றைய தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளின் பெயர்களை பட்டியலிட்ட போது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை அதில் சேர்க்கவில்லை.
இதனால் திமுக கூட்டணியிலிருந்து வேல்முருகன் வெளியேறுகிறாரா என்ற விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே அரசுக்கு எதிராக வேல்முருகன் ஆக்ரோஷமான கருத்துக்களை கூறி வரும் நிலையில் திமுக -தவாக கூட்டணி உறவு நலிவடைந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
இதனிடையே ஈரோட்டில் கூட்டணிக் கட்சிகள் குறித்து முதல்வர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

கூட்டணி தொடரும்
''இன்றைக்கு இந்த கூட்டணியை பொறுத்தவரையில் ஒரு கொள்கை அளவில் அமைந்திருக்கும் கூட்டணி, மறந்து விடாதீர்கள். நாடாளுமன்றத்தில் கூட்டணி அமைத்தோம். சட்டமன்றத் தேர்தலிலும் அமைத்து வெற்றி பெற்றோம். உள்ளாட்சி அமைப்புத் தேர்தலிலும் அந்த கூட்டணி தொடர்ந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். இப்போதும் இந்த இடைத்தேர்தலில் அந்த கூட்டணி தொடர்கிறது. இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல, அது வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், அது எந்த தேர்தலாக இருந்தாலும் இந்த கூட்டணி தொடரும். அதுவல்ல முக்கியம். ஆனால் கொள்கை அளவில் இன்றைக்கு இருக்கிறோமா? இல்லையா?

கூட்டணிக் கட்சிகள்
தி.மு.க.
காங்கிரஸ் பேரியக்கம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மனிதநேய மக்கள் கட்சி
விடுதலை சிறுத்தைகள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
ஆதித்தமிழர் பேரவை
இவ்வாறு பல்வேறு தோழமைக் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து இன்றைக்கு நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம் என்று சொன்னால், இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும், இந்த மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டணி தொடர்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.''

வேல்முருகன் கட்சி
மேற்கண்டவாறு கூட்டணிக் கட்சிகள் குறித்தும் கூட்டணி தொடரும் என்பது பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திமுக கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளின் பெயர்களையும் குறிப்பிட்ட அவர் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பற்றி அவர் எதையும் கூறவில்லை. இதன் மூலம் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிடையாதா என விவாதங்கள் எழுந்துள்ளன. இதனிடையே கடந்த சட்டசமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு வேல்முருகனை திமுக முன்னிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

உறவில் விரிசல்
என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல், பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசுக்கு எதிராக மிகவும் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார் வேல்முருகன். இதன் காரணமாக திமுக தவாக கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கலாமோ என விவாதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications