பொங்கலுக்கு முன்.. பெரிய தலைவர்கள் தவெகவுக்கு வருவார்கள்.. யாரை சொல்கிறார் செங்கோட்டையன்?
ஈரோடு: பொங்கல் பண்டிகை வருவதற்குள் பெரிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்கக் கூடியவர்களை கூட்டணியில் வரவேற்போம் என்று கூறிய செங்கோட்டையன், தவெக தரப்பில் விருப்ப மனு கொடுப்பது பற்றி விஜய் தான் முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.
ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த ஜேசிடி பிரபாகர் நேற்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கொண்டார். 10 நாட்களுக்கு முன்பாக அவரின் மகன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது தந்தையும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே ஓபிஎஸ் கூடாரத்தில் இருந்து மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியமாகி இருந்தார்.

தற்போது ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்திருக்கிறார். ஜேசிடி பிரபாகரின் செயல்பாடுகளுக்கு பின்னணியில் செங்கோட்டையன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் சில மாதங்கள் இணைந்து பயணித்த செங்கோட்டையன், அதிருப்தியாளர்களை அணுகி தவெக பக்கம் இணைத்து வருகிறார்.
இந்த நிலையில் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தவெக அலுவலகத்தில் வேலு நாச்சியார் படத்திற்கு மாலை அணிவித்து செங்கோட்டையன் மரியாதை செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், தவெக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலக நாடுலளில் சிறந்த தலைவராக தவெக தலைவர் விஜய் உள்ளார். மக்களால் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார்.
அனைவரும் மாற்றங்கள் வேண்டும் என்பதற்காகவே கடுமையாக உழைக்கிறோம். தவெக விருப்ப மனு வழங்குவது தொடர்பாக விஜய் முடிவு செய்வார். அதேபோல் எதிர்க்கட்சியும்ம், ஆளும் கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். அதனை நிறைவேற்றாததால் போராட்டம் நடைபெறுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் விமர்சிக்கும் ஒரே கட்சி தவெக தான்.
இரு கட்சிகளும் தவெகவை தாக்குகின்றனர். காய்ந்த மரத்தில் தான் கல்லடி படும். பொங்கல் பண்டிகை வருவதற்குள் பெரியத் தலைவர்கள் தவெகவில் இணைவார்கள். விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களை கூட்டணியில் வாழ்த்தி வரவேற்போம். விரைவில் யார் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள் என்பதை பாருங்கள். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications