டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்.. அறநிலையத்துறை போட்ட 5 நிபந்தனைகள்.. தவெக கொடுத்த உறுதி!
ஈரோடு: ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பிரச்சாரத்திற்கு அறநிலையத் துறை சார்பாக 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பிரச்சாரத்திற்கு வருவோருக்கான குடிநீர் மற்றும் உணவு பாதுகாப்பை கட்சியினர் உறுதிபடுத்த வேண்டும் என்றும், பிரச்சாரம் முடிந்தபின் சொந்த செலவில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தவெகவில் செங்கோட்டையன் இணைந்த பின், அவரது மாவட்டத்தில் நடக்கும் முதல் பொதுக்கூட்டமாகும். அதேபோல் தவெகவை தொடங்கிய பின் விஜய் ஈரோடு மாவட்டத்திற்கு முதல்முறையாக வருகிறார். இதனால் விஜய்யின் பிரச்சாரம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

அதேபோல் கரூர் சம்பவத்தை போல் மீண்டும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பெருந்துறை அருகில் உள்ள விஜயமங்கலம் டோல்கேட் பகுதிக்கு அருகே சரளை என்ற இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 31 ஏக்கர் நிலம் என்பதால், அதிகளவில் தொண்டர்களை கூட்ட முடியும்.
ஆனால் இந்த நிலம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது. இதனால் தவெக தரப்பில் 31 ஏக்கர் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள டெபாசிட் மற்றும் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதால் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒலிபெருக்கு வைத்து கூட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதேபோல் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வருபவர்களுக்கான குடிநீர், உணவு பாதுகாப்பை கட்சியினர் உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் முடிவடைந்த பின் அந்த இடத்தை சொந்த செலவில் தூய்மை செய்து கொடுக்க வேண்டும்.
அதேபோல் இடத்திற்கு எந்தவித உரிமையும் கோரக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தவெக பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விஜய்யின் பிரச்சாரத்திற்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றபடி தொண்டர்களை தயார்ப்படுத்தவும் மாவட்ட நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications