அப்பாடா.. ஈரோடு மாவட்ட பெண் காவலர்கள் பெருமூச்சு.. விரைவில் அமலாகிறது வார விடுமுறை
ஈரோடு: காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், பெண் காவலர்களுக்கு வார விடுமுறை அளித்திட ஈரோடு மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.
வார விடுமுறை, குறிப்பிட்ட பணி நேரம் இன்றி காவலர்கள் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைக் குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

காவல் பணியோடு சேர்த்து குடும்பப் பணியும் கவனிக்க வேண்டியுள்ளதாக பெண்காவலர்கள் பல்லாண்டு காலமாக குமுறி வருகின்றனர் இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முதல் இரண்டாம் நிலை காவலர் வரை பெண்கள் 311 பேர் பணியாற்றி வருகின்றனர்
இவர்களுக்கு வாரவிடுப்பு வழங்கும் திட்டத்தை வரும் 26-ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கூறியுள்ளார்.
வாரத்தில் ஒருநாள் சுழற்சி முறையில் இந்த விடுப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆண் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்குவது பற்றி தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்றார்.
போலீசுக்கு வாரவிடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அண்மை காலமாக வலுத்து வருகிறது. பணிச்சுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பெண் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் குறையும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஆண் காவலர்களுக்கும் இதே போன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications