பெயரை கேட்டாலே.. ஸ்டாலின் சொன்ன அந்த ஒருவரின் பெயர்.. ஈரோட்டில் விண்ணைப் பிளந்த விசில் சத்தம்
முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட போது ஒரு அமைச்சரின் பெயரை சொன்னார். அவர் பெயரை சொன்னவுடன் விசில் சத்தம் விண்ணை பிளந்தது.
ஈரோடு: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட போது ஒரு அமைச்சரின் பெயரை சொன்னார். அவர் பெயரை சொன்னவுடன் விசில் சத்தம் விண்ணை பிளந்தது. அப்படி என்ன சொன்னார் ஏன் விசில் சத்தம் பறந்தது, அவர் யார் என்பதை இப்போது பார்ப்போம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வீதி வீதியாக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், " இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது. எந்த சூழ்நிலையில் வந்திருக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்திருக்கிறது என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில், நம்முடைய மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நின்ற நம்முடைய அருமைத் தம்பி திருமகன் ஈ.வெ.ரா அவர்களை நீங்கள் எல்லாம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தீர்கள்.
அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணி - அவர் தொகுதி மக்களுக்காக அவையிலே பேசிய பேச்சு - இந்தப் பகுதிக்கு பாடுபட்டிருக்கக்கூடிய பல்வேறு நல்ல காரியங்கள், நலத் திட்டங்கள் இவையெல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 46 வயதிலே ஒரு இளைஞன், மிகத் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சிறப்பாக கட்சிக்கு மட்டுமல்ல, இந்தப் பகுதி மக்களுக்கு, இந்தச் சமுதாயத்திற்கு அவர் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று அவர் அகால மரணமடைந்துவிட்டார். அந்தச் செய்தி கேட்டு அவருடைய தந்தை நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டுமல்ல, நாங்கள் மட்டுமல்ல, இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் மிகுந்த வேதனைக்கு ஆளானவர்கள் என்பதை நன்றாக அறிவேன்.

வெற்றி தர வேண்டும்
இப்படிப்பட்ட சூழ்நிலையிலேதான், இந்த இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். எப்போதுமே தந்தை இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு மகன் வருவான். ஆனால் நம்முடைய சூழ்நிலை என்னவென்று கேட்டால், இது யாருக்கும் வரக்கூடாத ஒரு சூழ்நிலை. மகன் இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு அவருடைய தந்தையாக இருக்கக்கூடிய நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் இன்றைக்கு உங்களிடத்தில் வந்திருக்கிறார். இதை புரிந்துகொண்டு நீங்கள் மாபெரும் வெற்றியைத் தேடி தர வேண்டுமென்று நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.

எப்படி இறந்தார்
ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பல்வேறு விஷயங்களை பேசினார், அப்போது அவர் ஜெயலலிதா மரணம் குறித்து பேசினார். அவர் கூறும் போது, ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எப்படி இருக்கிறார் என்ற தகவலை மறைத்தனர். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை கேட்டு அதிமுகவில் இருந்த, முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தர்ம யுத்தமே நடத்தினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நாங்கள் சொல்லவில்லை அவர்களே சொன்னார்கள் என்றார்.

பறந்த விசில் சத்தம்
தொடர்ந்து திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியிலிட்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், வெற்றி உறுதி என்றாலும் நான் வந்து ஓட்டுக்கேட்கவில்லை என்றால் நாளைக்கு ஏன் வரவில்லை என உரிமையோடு கேட்பீர்கள். அதற்காகவே தேடி நாடி வந்திருக்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின் ஈரோட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது பேசும் போது, மாநகராட்சி இப்போது யார் கையில் இருக்கிறது தெரியுமா? கே.என். நேரு கையில் இருக்கிறது என்றார். அவர் பெயரை சொன்னவுடன் தொண்டர்கள் மத்தியில விசில் சத்தம் விண்ணை பிளந்தது. கே.என்.நேரு தான் தற்போது நகராட்சி துறை அமைச்சராக உள்ளார் என்பதை குறிப்பிட்ட ஸ்டாலின், அவர் எவ்வளவு ஸ்பீடாக இருப்பார் என்பது உங்களுக்கு தெரியும். எனவே யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆக ஏற்கனவே 300 கோடி ஒதுக்கீடு செய்து நிறைப்படுகின்ற பணிகளாக இருந்தாலும் சரி, புதிதாக ஒதுக்கீடு செய்யப்படும் 400 கோடி திட்டமாக இருந்தாலும் சரி, அவைகள் எல்லாம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.

ஜெயிலில் போடுவோம்
இதனிடையே கொடநாடு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரங்களின் போது பேசினார். அப்போது அவர் பேசும் போது, "ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் விசாரணை கமிஷன் அறிக்கை என்ன நிலை என்பதை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம். இதேபோல் தன்னை வளர்த்து தன்னை ஆளாக்கிய தாங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதாவின் கொடநாடு வீட்டிலேயே கொள்ளையடித்தவர்கள் அவர்கள். கொடநாட்டிலே கொள்ளையடித்தவர்கள் அவர்கள், கொலை செய்தவர்கள் அவர்கள். அந்த விபரம் எல்லாம் விரைவில் வரப்போகிறது. அதற்கு யார் காரணமாக இருந்தாலும் உறுதியாக சொல்கிறேன். அத்தனை பேரையும் பிடித்து ஜெயிலில் போடுவோம். இவ்வளவு அக்ரமங்களையும் செய்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக இன்று திரிந்து கொண்டு அந்த அம்மா பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications