பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி.. சின்னசேலத்தில் பேக்கரி ஊழியர்களை அலறவிட்ட பெண்கள்
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்ததாகக்கூறி அந்தக் கடைக்கு வந்த இரண்டு பெண்கள் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
சின்னசேலம் ஒன்றிய அலுவலகம் அருகே அரோமா கேக்ஸ் என்ற பேக்கரி அமைந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த பேக்கரியில் நேற்று முன்தினம் இரண்டு பெண்கள் பப்ஸ்களை பார்சலாக வாங்கி சென்றுள்ளனர். அவற்றை சாப்பிட்ட பெண்களின் குழந்தைகள் வீட்டில் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குழந்தைகள் சாப்பிட்ட பப்சை எடுத்து பெண்கள் சாப்பிட்ட போது அது கெட்டுப்போய் இருந்தது தெரியவந்தது. ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும் பேக்கரிக்கு சென்று கெட்டுப்போன பப்ஸை ஏன் விற்றீர்கள் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடைக்காரர்கள் முயன்றும் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர்.
இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதவு செய்து சமூக வலைதளங்களில் பகிர, தற்போது அது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் லாபத்துக்காக கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பேக்கரிகள், உணவகங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் காலாவதியான பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் ஷவர்மாவுக்கு தடை விதிக்கப்படும் என்றே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியது விவாதப் பொருளான நிலையில் இந்நிகழ்வு அரங்கேறியுள்ளது.












Click it and Unblock the Notifications