பிரம்மாண்டம்.. 1265 கிலோவுக்கு ஒரே லட்டு.. அயோத்தி ராமருக்காகவே ரெடியான ஹைதராபாத் ஸ்பெஷல் பிரசாதம்
ஹைதராபாத்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக, ஹைதராபாத்தில் 1265 கிலோவில், லட்டு பிரசாதம் தயாராகி உள்ளது.
வருகிற 22ம் தேதி அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.. இதற்காக நாடு முழுவதுமுள்ள அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், விஐபிகள், தொழிலதிபர்கள் உட்பட பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

மற்றொருபக்கம், அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பல்வேறு பொருட்களை கொண்டு செல்கின்றனர்..
அந்தவகையில், 108 அடி நீள தூபக் குச்சி, 2100 கிலோ எடையுள்ள மணி, 1100 கிலோ எடையுள்ள ராட்சத விளக்கு, தங்க பாதணிகள் என பல சிறப்பு பரிசுகள் அயோத்தி ராமர் கோயிலுக்கு வைக்கப்பட்டு வருகின்றன..
லட்டு தயாரிப்பு: அந்த வரிசையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர், அயோத்தி ராமருக்கு பிரத்தியேகமாக 1265 கிலோ எடையுள்ள லட்டு தயாரித்துள்ளார்.. இவர் கடந்த 2000-ம் வருடத்திலிருந்து ஸ்ரீராம் கேட்டரிங் என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார்...
ராமஜென்ம பூமியில் அவதரிக்க போகும் ராமருக்காகவே, பிரத்தியேகமாக இந்த லட்டு தயாரிக்க முடிவு செய்தாராம்.. இதற்காக 30 பேர் கொண்ட குழுவினரையும் நியமித்துள்ளார்.. தொடர்ந்து, 24 மணி நேரமும் லட்டு தயாரிக்கும் பணியும் ஆரம்பமாகி உள்ளது.. இறுதியில், 1265 கிலோ எடையுள்ள லட்டுவை தயார் செய்திருக்கிறார்கள்.
லட்டு பயணம்: இந்த லட்டுவை ஹைதராபாத்தில் இருந்து அயோத்திக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டது. இந்த லட்டு பயணம் இன்று தொடங்கியிருக்கிறது..
இந்த விசேஷ லட்டினை தயாரித்த, ஸ்வீட் மாஸ்டர் துஷா சன் சொல்லும்போது, எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.. எனக்கு இவ்வளவு பெரிய வேலை கிடைப்பது, இதுதான் முதல்முறை. ரொம்ப கஷ்டப்பட்டு, கடினமாகவே உழைத்து இந்த பெரிய லட்டுவை செய்துள்ளோம். பயணத்தின்போது சேதமாகாதவாறு இந்த லட்டுவை தயாரித்துள்ளோம்" என்று பூரித்து சொல்கிறார்
அனுமதி: இதுகுறித்து உரிமையாளர் நாகபூஷணம் ரெட்டி சொல்லும்போது, அயோத்தியில் கும்பாபிஷே நாளில், நாங்கள் இந்த லட்டுவை வழங்க முடிவு செய்திருக்கிறோம். இது தொடர்பாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை தொடர்பு கொண்டு அனுமதியும் பெற்றுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications