130 அயிட்டத்துடன்.. மாமியார் கல்பனா வைத்த சங்கராத்தி விருந்து.. அசந்து நின்ற தெலுங்கானா மாப்பிள்ளை
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், சரூர் நகர் அடுத்த சாரதா நகர்தான் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதிலும் மாமியார் கல்பனா வைத்த சங்கராந்தி விருந்தால் திணறிப்போய் உள்ளாராம் புதுமாப்பிள்ளை.
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களுக்கு கொண்டாட்டம்தான். உழவுத்தொழிலுக்கு மரியாதை செலுத்தி வணங்கும் நாள் என்பதால் தமிழகம் மட்டுமன்றி விவசாயம் செய்யும் மற்ற மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது புதிதாய் திருமணமான தம்பதியர்களும், "தலை தீபாவளி / பொங்கல்" கொண்டாடி மகிழ்வார்கள்.. இதுபோன்ற பண்டிகைகளின்போது, தம்பதியருக்கு பல்வேறு வகையான உணவுகளில் விருந்து வைத்து, நகைகளும் பரிசளிக்கப்படும்.
தெலுங்கானா, ஆந்திரா: இந்த உணவு விருந்து கலாச்சாரத்தில், மணமக்களை ஆச்சரியப்படுத்துவதிலும், சர்ப்ரைஸ் தருவதிலும், மற்ற மாநிலங்களைவிட, ஆந்திர, தெலுங்கானா மக்கள் தான் டாப் என்று சொல்லலாம்.
நம்ம ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை போல, ஆந்திராவில் உழவை கொண்டாட சங்கராந்தி என்ற தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2 பண்டிகைகளும் ஒரேநாளில் வரும் என்பதால், மணமக்களுக்கு அட்டகாசமாக விருந்து வைத்து, அசத்துவார்கள். தெலுங்கானா, ஆந்திராவில் ஒவ்வொரு வருட சங்கராந்திக்கும், மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டில்வைக்கும் பிரம்மாண்டமான விருந்துகள், இணையத்திலும் வைரலாவது வழக்கமாகும்.
கல்பனா: அந்தவகையில், இப்போதும் ஒரு மாமியார், தன்னுடைய மாப்பிள்ளைக்கு ஊரே மெச்சும்படியான விருந்து ஒன்றை வைத்திருக்கிறார்.. தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், சரூர் நகர் அடுத்த சாரதா நகரை சேர்ந்தவர் கல்பனா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை ஆந்திரா மாநிலம், காக்கி நாடாவை சேர்ந்த மல்லிகார்ஜூன் என்பவருக்கு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து அனுப்பிவைத்திருந்தார்.
இப்போது, திருமணத்திற்கு பிறகு மல்லிகார்ஜுன், சங்கராந்தி பண்டிகைக்காக மாமியார் வீட்டிற்கு வந்திருக்கிறார்.. மருமகனுக்கு மட்டன், சிக்கன், மீன் என பலவிதமான உணவு வகைகள் மற்றும் இனிப்பு வகைகள் என விதவிதமாக சமைத்து கல்பனா பரிமாறினார்.. கிட்டத்தட்ட 130 வகையான உணவுகளை கல்பனா சமைத்து விருந்து வைத்துள்ளார்..
திக்குமுக்காடிய மாப்பிள்ளை: இத்தனை அயிட்டங்களையும் பார்த்து புதுமாப்பிள்ளை மல்லிகார்ஜுன் திக்குமுக்காடிப் போய்விட்டாராம்.. மாப்பிள்ளை இந்த விருந்தை முழுமையாக எப்போது சாப்பிட்டு முடித்தார் என்று நமக்கு தெரியவில்லை.. ஆனால், இந்த 130 சமையல் ஐட்டங்களை பார்க்க, அந்த ஊர் மக்கள் திரண்டு வந்துவிட்டார்களாம்.. சங்கராந்திக்கு மாமியார் கல்பனா வைத்த விருந்துதான் தற்போது சோஷியலில் மணக்க மணக்க வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications