வாழை மரத்தில் இப்படி ஒரு அதிசயமா? ஒரே மரத்தில் 7 தார்கள்.. ஆந்திரா விவசாயி வயலில் குவிந்த மக்கள்
ஹைதராபாத்: ஆந்திராவின் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ஒரு வாழை மரத்தைப் பார்க்கவே இப்போது மக்கள் ஆர்வமாக சென்று கொண்டிருக்கிறார்கள். காரணம், சாதாரணமாக ஒரு வாழை மரத்தில் ஒரு வாழைத்தார் மட்டுமே வரும் நிலையில், இங்கு ஒரே மரத்தில் 7 வாழைத்தார்கள் வந்திருக்கிறது. இதைப் பார்த்த உள்ளூர் மக்களே ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். இது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராஜோல் மண்டலத்தில் உள்ளது மெறகபாலெம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எலுமர்த்தி பாபூராவ். இவருடைய வயலில் ஏராளமான வாழை மரங்கள் உள்ளன..

பொதுவாக வாழைத் தோட்டங்களில் ஒவ்வொரு செடிக்கும் ஒரு வாழைத்தார் வருவது தான் வழக்கம்... ஆனால் பாபூராவின் வயலிலுள்ள இந்த மரத்தில் அப்படியில்லை. ஒரே மரத்தின் அடிப்பகுதியில், அதாவது நிலத்துக்குள் இருக்கும் வேர்களுக்கு அருகிலிருந்து, 7 வாழைத்தார்கள் வெளியே வந்திருக்கின்றன.
ஒரே வாழை மரத்தில் 7 தார்கள்
அதிலும் இந்த ஏழு தார்களும் வெவ்வேறு வாழைச் செடிகளில் இருந்து வந்தவை கிடையாது. ஒரே வாழை மரத்தின் அடிப்பகுதியில் இருந்துதான் 7 தார்களும் முளைத்து வந்திருக்கின்றன. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அப்பகுதி விவசாயிகளும் ஆச்சரியப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்நாளில் இப்படியொரு சம்பவத்தை கேள்விப்பட்டதும் இல்லை, இதுவரை பார்த்ததும் இல்லை என்று திகைத்து சொல்கிறார்கள்..
இந்த அரிய காட்சி பற்றிய தகவல் மெறகபாலெம் கிராமத்திலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவியதும், அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களும் பாபூராவின் வயலுக்கு வர ஆரம்பித்து விட்டார்கள்.. அந்த வித்தியாசமான வாழை மரத்தை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டு செல்கிறார்கள்.
ஹாட் டாபிக் 7 வாழைத்தார்கள்
இப்போது மெறகபாலெம் பகுதியில் இந்த 7 தார் வாழை மரம்தான் ஹாட் டாபிக்... இதைப் பார்த்தவர்கள் போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள். அதனால் இந்த வாழை மரம் பற்றிய பேச்சு மேலும் பரவி வருகிறது.
ஒரே மரம்.. 7 வாழைத்தார்கள்.. இது எப்படி சாத்தியமானது? என்பதுதான் இப்போது அங்குள்ள மக்களின் முக்கிய கேள்வியாக இருக்கிறது. இயற்கை சில நேரங்களில் இப்படியும் ஒரு ஆச்சரியத்தை காட்டும் என்பதற்கு இந்த வாழை மரமும் ஒரு உதாரணமாக மாறியிருக்கிறது.
அறிவியல் காரணம் - மரபணு மாற்றம்
எனினும், இதற்கு பின்னாலும் ஒரு அறிவியல் காரணம் இருக்கலாம் என்கிறார்கள்.. பொதுவாக ஒரு வாழை மரத்தில் ஒரு வாழைத்தார் மட்டுமே வரும். ஆனால் அரிதாக வாழையின் பூப்பகுதி வளரும்போது அது கிளையாகப் பிரிந்து, ஒரே மரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் உருவாகலாம்.
மரபணு மாற்றம் அல்லது மரத்தின் வளர்ச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.. ஆனால் பல நிகழ்வுகளில் இது தற்செயலான வளர்ச்சி மாற்றமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, தாவரங்களில் வளர்ச்சியின் உச்சிப் பகுதியில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் காரணமாக தண்டு அல்லது பூப்பகுதி எதிர்பாராத வகையில் கிளைப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கலாம். இதற்கு மரபணு மாற்றம், சில நுண்ணுயிர்கள், வைரஸ் தாக்கம், சுற்றுச்சூழல் காரணிகள் அல்லது தாவரத்துக்கு ஏற்பட்ட காயம் போன்றவை காரணிகளாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
இருந்தாலும், ஆனால் ராஜோல் பகுதியில் உள்ள இந்த குறிப்பிட்ட மரத்தில் 7 தார்கள் உருவானதற்கான சரியான காரணம் என்ன என்பது ஆய்வு செய்தால்தான் உறுதியாகத் தெரிய வரும்...!!!



Click it and Unblock the Notifications
