விழாவில் பெயரை மறந்ததால்.. அல்லு அர்ஜுனுக்கு மறக்க முடியாத சம்பவம் செய்தாரா தெலுங்கானா முதல்வர்?
ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்பு திரையிடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே பொது நிகழ்ச்சி ஒன்றில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயரை அல்லு அர்ஜுன் மறந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதன் காரணமாகவே அல்லு அர்ஜுன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் சொல்லி வருகிறார்கள்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிச. 5ம் தேதி வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ரிலீசான சில நாட்களிலேயே படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்தது. அது இன்னுமே தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

உயிரிழப்பு: முன்னதாக டிச. 4ம் தேதி புஷ்பா 2 சிறப்புக் காட்சிகள் ஹைதராபாத் முழுக்க திரையிடப்பட்டன. அப்படி அங்குள்ள சந்தியா தியேட்டரில் சிறப்பு திரையிடல் போது அல்லு அர்ஜுன் அங்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்ட போதிலும் அவருக்குத் தெலுங்கானா உயர்நீதிமன்றம் 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது
இதற்கிடையே அல்லு அர்ஜுன் கைதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயரை மறந்து இருப்பார்.
சிஎம் பெயரை மறந்த அல்லு அர்ஜுன்: அதாவது புஷ்பா 2 படம் மிக பெரிய ஹிட் ஆன நிலையில், வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் அல்லு அர்ஜுன் பேசும் போது, புஷ்பா 2 படத்தின் சிறப்பு திரையிடலுக்கு அனுமதி தந்த தெலுங்கானா அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். மேலும், சினிமா துறைக்கு ஆதரவளிக்கும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி எனச் சொல்ல வந்தார். இருப்பினும், அப்போது அல்லு அர்ஜுன் ரேவந்த் ரெட்டி பெயரை மறந்துவிட்டார்.
தெலுங்கானா முதல்வர், தெலுங்கானா முதல்வர் என இரண்டு முறை சொல்லித் தடுமாறினார். பின்னர் ஒருவாறு சமாளித்து, "பேசி பேசி தொண்டை வறண்டுவிட்டது. ஒரு நிமிடம்.." எனச் சொல்லி தண்ணீரை வாங்கி குடித்தார். அதற்குள் அருகே இருந்தவர்கள் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி என்று சொல்லிவிடவே தனது பேச்சைத் தொடர்ந்தார். சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்ததற்கும் திரைத்துறைக்கும் ஆதரவளிக்கும் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி எனச் சொல்லி முடித்தார்.
கிண்டல்: இதைக் குறிப்பிட்டு தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகனான கே.டி. ராமராவ் கூட கிண்டல் செய்திருப்பார். அதாவது நேர்காணல் ஒன்றில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு கேடிஆர், "அவர் சிறப்பு காட்சிகளுக்கு எல்லாம் அனுமதி தருகிறார். ஆனால், சினிமாகாரர்களுக்கு அவரது பெயர் நினைவில் இல்லாத வகையிலேயே அவரது செயல்பாடுகள் உள்ளன" என்று கிண்டல் செய்து இருந்தார்.
அல்லு அர்ஜுன் இப்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.. சிஎம் பெயரை விழாவில் மறந்ததாலேயே அல்லு அர்ஜுனுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications