இனி ஆட்சி மாறினாலும் முதலீடுகளை ரத்து பண்ண முடியாது! புதிய சட்டத்திற்கு விதை போட்ட சந்திரபாபு நாயுடு
அமராவதி: ஒரு மாநிலத்தில் ஆட்சி மாறும்போது, முந்தைய அரசு எடுத்த முடிவுகளும், அறிவித்த திட்டங்களும் அரசியல் நிறுத்தப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை நாம் எப்போதும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளால் முதலீடுகள் பாதிக்கப்படுவதுடன், அந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும். இதை தடுக்கும் வகையில் ஆந்திர அரசு முதலீட்டு பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வரவுள்ளது.
எப்போதுமே தேர்தலில் ஆட்சி மாற்றம் நடக்கும்போது, புதிதாக ஆட்சியை பிடிக்கும் அரசுகள் முந்தைய அரசு எடுத்த பெரும்பாலான முடிவுகளை ரத்து செய்யும் அல்லது மாற்றி அறிவிக்கும். தமிழ்நாட்டிலும் கூட நாம் தடந்த காலங்களில் இதுபோல பல விஷயங்களை பார்த்து இருக்கிறோம். நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலும் இதே தான் நடந்துள்ளது.

புதிய சட்டம்
இதை கருத்தில் கொண்டே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுடன் அரசு போட்ட ஒப்பந்தங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். இந்தியாவிலேயே இதுபோன்ற சட்டத்தை கொண்டுவரும் முதல் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் இருக்கும்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறுகையில், "ஆட்சி மாற்றம் அல்லது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. அதை தடுக்கவே இந்த சட்டம். மத்திய அரசும் தூட நாடு முழுவதும் இதுபோன்ற சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மாற்ற முடியாது!
சந்திரபாபு நாயுடு முன்மொழிந்துள்ள இந்த சட்டத்தின் படி, முதலீட்டாளர்களுக்கு அரசு உறுதியளித்த நிலம், தண்ணீர், நிதி மற்றும் நிதி சாராத சலுகைகள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பாதுகாக்கப்படும். அதாவது, ஒரு நிறுவனம் அரசின் உறுதிமொழியை நம்பி முதலீடு செய்த பிறகு, அடுத்த தேர்தலில் வேறு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது என்பதற்காக அந்த உறுதிமொழிகளை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது.
என்ன காரணம்
2014ல் ஆந்திரா- தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, ஆந்திராவை முதலீட்டுக்கான முக்கிய மையமாக மாற்ற முயன்றார். குறிப்பாக தலைநகர் அமராவதியை சுற்றி பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் 2019ல் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும், முந்தைய அரசு எடுத்த பல முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக 2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படாத திட்டங்களை ரத்து செய்ய ஜெகன் அரசு உத்தரவிட்டது.
போகாபுரம் விமான நிலையம், கடப்பா உருக்காலை என பல திட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டது. சுமார் ரூ.2,300 கோடி முதலீட்டில் லூலூ குழுமம் முதலீடு செய்ய இருந்த நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலமும் திரும்பப் பெறப்பட்டது. இப்படி பல்வேறு திட்டங்களை ஜெகன் அரசு ரத்து செய்தது. இதுபோன்ற நடவடிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
குவியும் முதலீடு
இந்த சூழலில் தான் 2024ல் மீண்டும் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், நாயுடு அரசு மீண்டும் முதலீடுகளை பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2024க்கு பிறகு ஆந்திராவுக்கு ரூ.22.5 லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளன. இவை வெறும் உறுதிமொழியாக மட்டும் இல்லாமல் சுமார் 50%க்கு மேல் செயல்பாட்டிற்கும் வந்துவிட்டதாக கூறுகிறார் அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.
சட்ட பாதுகாப்பு
ஆந்திர அரசு செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எலக்ட்ரானிக்ஸ், பாதுகாப்பு துறை என பல துறைகளில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை போட்டு வருகிறது. இருப்பினும், இதுபோல நிறுவனங்கள் முதலீடு செய்ய பல ஆண்டுகள் வரை ஆகும். இடையில் தேர்தல் வந்து ஆட்சி மாற்றம் நடந்தால் என்ன நடக்கும் என்ற அச்சம் அவர்களுக்கு வரக்கூடாது. அதை கருத்தில் கொண்டே இந்த புதிய சட்டத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த முதலீட்டு பாதுகாப்பு சட்டம் என்பது ஆந்திராவுடன் மட்டும் நின்றுவிடாமல்.. நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும் என்பதே சந்திரபாபு நாயுடுவின் விருப்பம்




Click it and Unblock the Notifications
