ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைக்க வந்த கணவர்.. பரிசு மழை பொழிந்த மாமியார்.. கூடவே 100 வகை விருந்து!
ஹைதராபாத்: ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைத்து செல்ல வந்த கணவருக்கு மிக பெரிய சர்ப்பரைஸ் காத்திருந்துள்ளது. அவர் வீட்டு வாசலில் இருந்து உள்ளே செல்லும் போது ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பரிசை கொடுத்துள்ளனர். இது மட்டுமின்றி உள்ளே 100 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து கொடுத்தும் அசத்தியுள்ளனர்.
மாமியார் வீட்டிற்கு செல்லும் மருமகனுக்கு பிரம்மாண்ட விருந்து கொடுப்பது தொடர்பான சம்பவங்களை நாம் சமீபத்தில் பார்த்திருப்போம். ஆனால், சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சம்பவம் அதை எல்லாம் தூக்கி சாப்பிடுவதாக இருந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

பிரம்மாண்ட வரவேற்பு
ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் நர்சிப்பட்டணத்தில் மாமியார் வீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளைக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. நர்சிப்பட்டணம் சாந்திநகரை சேர்ந்த ரமேஷ் குமார் - கலாவதி தம்பதியின் மகள் நவ்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஹர்ஷாவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
ஆடி மாதம் காரணமாக நவ்யாவை அவரது பெற்றோர் வீட்டில் ஸ்ரீஹர்ஷா விட்டு சென்றார். ஆடி மாதம் முடிந்ததும் மனைவியை அழைத்து செல்வதற்காக ஸ்ரீஹர்ஷா மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மருமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மாமியார் அவருக்கு தடபுடலான விருந்து கொடுத்திருக்கிறார். விருந்து மட்டுமின்றி வரவேற்பு முதலே பிரம்மாண்டம் காட்டியுள்ளனர்.
மலர்களை தூவி வரவேற்பு
வீட்டின் வாசலில் இருந்து உள்ளே வீடு வரை பூக்களால் அலங்கரித்துள்ளனர். இதற்காக சுமார் 100 அடி தொலைவிற்கு மலர்களை தூவி வரவேற்றுள்ளனர். ஸ்ரீஹர்ஷா ஒவ்வொரு அடியாக நடக்கும்போதும், அருகே இருந்த உறவினர்கள் அவருக்கு ஒவ்வொரு பரிசாக வழங்கி வரவேற்றனர். வெள்ளியால் செய்யப்பட்ட சாமி சிலைகள் தொடங்கி ஏகப்பட்ட பரிசு மழையை பொழிந்துள்ளனர்.
பின்னர் மருமகனின் கண்களை கட்டி வீட்டுக்குள் அழைத்து சென்ற குடும்பத்தினர், விருந்து நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து சென்றனர். கண்களில் கட்டப்பட்டிருந்த துணியை அகற்றியதும், அங்கிருந்த உணவை பார்த்து ஸ்ரீஹர்ஷாவுக்கு தலையே சுற்றிவிட்டது. மேஜை முழுவதும் விதவிதமான உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை ஸ்ரீஹர்ஷா திகைத்துப் போனார்.
பிரம்மாண்ட விருந்து
இந்த ஸ்பெஷல் விருந்தில் இட்லி, வடை, பூரி, பொங்கல், உப்புமா, தோசை, இனிப்பு வகைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. மாமியாரும் மனைவி நவ்யாவும் இணைந்து புது மாப்பிள்ளை ஸ்ரீஹர்ஷாவுக்கு உணவுகளைப் பரிமாறி, தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
ஸ்ரீஹர்ஷாவுக்கு இதுபோன்ற பிரம்மாண்ட விருந்தை நவ்யா வீட்டினர் தருவது இது முதல்முறை இல்லையாம். ஏற்கனவே கடந்த சங்கராந்தி பண்டிகையின்போதும் இதேபோல் ஸ்ரீஹர்ஷாவுக்கு அவரது மாமியார் வீட்டினர் பிரம்மாண்ட விருந்து ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இட்லி, உப்புமா, பூரி, புளியோதரை, மசாலா தோசை உள்ளிட்ட பல்வேறு உணவுகள் பரிமாறப்பட்டிருந்தன.
நெகிழ்ந்து போன மாப்பிள்ளை
இந்த முறை ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைத்து செல்ல வந்தபோதும், அதைவிட பிரம்மாண்டமாக விருந்து ஏற்பாடு செய்து மாமியார் வீட்டினர் அசத்தியுள்ளனர். இந்த அன்பான வரவேற்பால் நெகிழ்ந்த ஸ்ரீஹர்ஷா, இப்படியொரு குடும்பத்தில் பெண் எடுக்க தான் மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
