தெலுங்கானாவில் பாஜக போடும் ஸ்கெட்ச்.. அதென்ன “மிஷன் 31..” தனித்தொகுதிகளை மொத்தமாக அள்ள பிளான்
ஐதராபாத்: தெலுங்கானாவில் எஸ்.சி/எஸ்.டி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனித்தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என பாஜக வியூகம் வகுத்து வருகிறதாம். இதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகளையும் கட்சி பணிகளையும் தற்போதே பாஜக மேலிடம் முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நடப்பு தேர்தலுக்கக முதல் முறையாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களின் 119 எம்.எல்.ஏக்கள் தெலுங்கானாவில் பாஜக களம் இறக்கியுள்ளது.

தெலுங்கானாவில் தொகுதிகளில் பயணம் செய்து மக்களின் கருத்துகள், வேட்பாளர்கள் யாராக இருந்தால் வெல்லும் வாய்ப்பு என்பதை எல்லாம் இந்த எம்.எல்.ஏக்கள் குழு ஆய்வு செய்ய உள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை செப்டம்பர் முதல் வாரம் வெளியிட பாஜக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ராஷ்டிர சமிதி, 90 சதவீதம் சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கே வாய்ப்பு கொடுப்பதாக பேச்சு அடிபடுகிறது.
இதனால், அதிருப்தியை சரியாக பயன்படுத்தி பலன் பெற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு கடும் சவால் தரும் வகையில்தான் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக இருக்கும் பாஜக, லோக்சபா தேர்தலின் போது தெலுங்கானாவில் சில இடங்களையாவது கைப்பற்ற இந்த பார்முலா உதவக் கூடும் என்ற கணக்கில் படு சுறுசுறுப்பாக இந்த வேலையில் ஈடுபட்டுள்ளதாம். இதனிடையே, தெலுங்கனாவில் உள்ள தனித்(ரிசர்வ்) தொகுதிகளை மொத்தமாக அள்ள பாஜக பிளான் ஒன்றை போட்டுள்ளதாம்.
அதற்காக 'மிஷன் 31' என வியூகம் வகுத்து வரும் பாஜக, எஸ்.சி/எஸ்.டி வேட்பாளர்களுக்காக ஒதுகப்படும் அனைத்து தொகுதிகளையும் வெற்றி பெற வேண்டும் என்று கணக்கிட்டு அதற்கான பணிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் சுனில் பன்சால், தெலுங்கானாவில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications