தெலுங்கானாவின் பணக்கார வேட்பாளர்.. 600 கோடி சொத்துடன் காங்கிரஸின் விவேகானந்தா முதலிடம்
ஐதராபாத் : தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மிகவும் பணக்கார வேட்பாளர் என்ற சாதனையை ஜி விவேகானந்தா என்ற காங்கிரஸ் வேட்பாளர் படைத்துள்ளார். ரூ.600 கோடிக்கு மேல் சொத்து கொண்ட இவர் அண்மை பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
இந்த மாத தொடக்கத்தில் தான், சென்னூர் வேட்பாளரான விவேகானந்தா என்ற விவேக் வெங்கடசாமி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

தெலுங்கானா மாநிலத்தை கடந்த 10 வருடங்களாக கேசிஆரின் கட்சி ஆண்டு வருகிறது.. தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரான கே சந்திரசேகர் ராவ் முதல்வராக உள்ளார். இவரை வீழ்த்தி, இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் கடும் வியூகம் வகுத்து பிரச்சாரம் செய்து வருகின்றன.
வரும் 30ம் தேதி தெலுங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த 4,798 வேட்பாளர்கள் 5,716 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள். நவம்பர் 13 ஆம் தேதியான வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. நவம்பர் 15 ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
வேட்புமனு பரிசீலனை நடந்து முடிந்துள்ளதால், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தெலுங்கானாவில் வெளியாகி உள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மிகவும் பணக்கார வேட்பாளர் என்ற சாதனையை காங்கிரஸ் கட்சியின் விவேகானந்தா என்ற விவேக் வெங்கடசாமி படைத்துள்ளார். மொத்தம் 600 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள விவேகானந்தர் சென்னூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
விவேகானந்தரும் அவரது மனைவியும் ரூ. 377 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை வைத்துள்ளனர், முக்கியமாக 1981 ஆம் ஆண்டு விவேகானந்தர் நிறுவிய விசாகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் வடிவில் அவருக்கு சொத்துக்கள் உள்ளது. குடும்பத்தின் அசையா சொத்துக்கள் ரூ.225 கோடிக்கு மேல் உள்ளதாம்.
விவேகானந்தர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், விவேகானந்தர் மற்றும் அவரது மனைவிக்கு ரூ.41.5 கோடி கடன்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் விவேக்கின் ஆண்டு வருமானம் 2019 நிதியாண்டில் ரூ.4.66 கோடியிலிருந்து ரூ.6.26 கோடியாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் அவரது மனைவியின் வருமானம் ரூ.6.09 கோடியிலிருந்து ரூ.9.61 கோடியாக உயர்ந்துள்ளது.
விவேகானந்தருக்கு அடுத்த படியாக பட்டியலில் இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் தலைவர் பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளார். இவருக்கு ரூ.460 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. பாளைர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.460 கோடியாகும். ரூ.44 கோடி கடன்கள் தனக்கு இருப்பதாக ஸ்ரீனிவாஸ் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 9ஆம் தேதி ஐதராபாத் மற்றும் கம்மத்தில் உள்ள ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் கோபால் ரெட்டி தாக்கல் செய்து பிரமாண பத்திரத்தில் 2019ஆம் நிதியாண்டில் ரூ.36.6 லட்சம் வருமானம் இருந்தது என்றும், 2022-23ஆம் ஆண்டுக்கான வருமானம் ரூ.71.17 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.. அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.459 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முனுகோட்டை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் கோபால் ரெட்டி, தனது நிறுவனமான சுஷி இன்ஃப்ரா அண்ட் மைனிங் லிமிடெட் நிறுவனத்தில் 1.24 கோடி பங்குகளை வைத்துள்ளதாகவும் அதன் மதிப்பு ரூ.239 கோடி என்றும் கூறியுள்ளார். ரெட்டியின் குடும்பத்துக்கு ரூ.157 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், ரூ.4.14 கோடி கடன்கள் உள்ளன என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் ஆளும் கட்சியான பாரதிய ராஷ்டிரா சமிதி (பிஆர்எஸ்) வேட்பாளர் பைலா சேகர் ரெட்டி, ரூ.227 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் ரூ.83 கோடி கடன்கள் உள்ளதாக கூறியுள்ளார்.
தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், நவம்பர் 9ஆம் தேதி தாக்கல் செய்தத தனது வேட்புமனுவுடன் கூடிய பிரமாணப் பத்திரத்தில் கிட்டத்தட்ட ரூ.59 கோடி மதிப்பிலான குடும்ப சொத்துக்கள் மற்றும் ரூ.25 கோடி மதிப்பிலான கடன்கள் இருப்பதாக அறிவித்துள்ளார். கே.சி.ஆர் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் தெலுங்கானா மாநில போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்டவை என்றும், அவற்றில் அவர் எந்த கிரிமினல் குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படவில்லை என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்..
கேசிஆர் மனைவி ஷோபாவின் பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ஏழு கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றும், அவரது பூர்வீக குடும்பத்தின் பெயரில் (பிரிக்கப்படவில்லை)) ஒன்பது கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து உள்ளதாகவும் 1.5 கோடி மதிப்புள்ள 2.81 கிலோ தங்க நகைகள், வைர நகைகளை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications