கேசிஆர் பாஜகவின் பீ டீம்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங். வைத்த கண்டிஷன்.. போட்டு உடைத்த ராகுல்
ஐதராபாத்: தெலுங்கானாவில் ஆட்சி செய்யும் சந்திரசேகர் ராவ் பாஜகவின் பி டீம் என்று விமர்சித்த ராகுல் காந்தி, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நிபந்தனை ஒன்றை வைத்ததாகவும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி இன்று தெலுங்கானா மாநிலம் சென்றார். தெலுங்கானாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, சந்திரசேகர் ராவை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறியாதாவது:- தெலுங்கானாவில் காங்கிரஸ் கடசிக்கும் பாஜகவின் பீ டீமிற்கும் இடையே போட்டி உள்ளது.

கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தியது போல தெலுங்கனாவில் சந்திரசேகர் ராவை வீழ்த்துவோம். பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்.எஸ்) கட்சி பாஜகவின் பி டீம். சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமரிடம் உள்ளது. சந்திரசேகர் ராவின் பி.ஆர்.எஸ் கட்சி அங்கம் வகித்தால் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் இணையாது என்று எதிர்க்கட்சி தலைவர்களிடம் தெரிவித்தேன்.
அதை தெளிவாகவே சொல்லிவிட்டோம். பாஜகவின் பி டீம் உடன் எந்த ஒரு உடன்பாடுக்கும் நாங்கள் தயாராக இல்லை. தெலுங்கானாவில் மும்முனை போட்டி நிலவுவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் தெலுங்கானாவில் பாஜக தற்போது போட்டியில் இல்லை. பாஜகவின் நான்கு டயர்களுமே பஞ்சர் ஆகிவிட்டது. தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவின் பி டீமிற்கும் தான் போட்டி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு முதுகெலும்பாக அதன் தொண்டர்கள்தான் உள்ளார்கள். உங்களின் ஆதரவுடன் வரும் தேர்தலில் பிஆர்.எஸ் கட்சியை வீழ்த்துவோம். பாரத் ஜோடோயாத்திரையின் போது பெரும் ஆதரவு தெலுங்கானாவில் எனக்கு கிடைத்தது. இதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாரத் ஜோடோ யாத்திரையின் போது நாட்டின் ஒற்றுமை குறித்து பேசினோம். ஒருபக்கம் நாட்டின் ஒற்றுமை குறித்த சித்தாந்தத்தை நாங்கள் பேசிவருகிறோம்.
மற்றொரு பக்கம் நாட்டை பிளவுபடுத்த முயற்சி நடக்கிறது. ஒட்டுமொத்த நாடும் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ஆதரவு அளித்தது. நாட்டில் வெறுப்புணர்வு பரப்பப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள திட்டமிட்டுள்ளன.
இதற்காக கடந்த பீகாரின் பாட்னாவில் அண்மையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக உள்பட 17 எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன. பாஜகவை ஓரணியில் நின்று எதிர்ப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூரில் வரும் 13,14 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டத்தில் சந்திரசேகர் ராவின் பீ.ஆர்.எஸ் பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications