துணிக்கு வண்ணம் பூசும் சாயம், டால்கம் பவுடர்..ஹைதராபாத்தில் அதிர்ச்சியூட்டும் உணவுக் கலப்படம் அம்பலம்
ஹைதராபாத்: ஹைதராபாத் உணவுப் பொருள் கலப்படக் கண்காணிப்புக் குழு, மசாலாப் பொருட்கள் வியாபாரம் மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனையில் துணிக்கு வண்ணம் பூசும் சாயம், டால்கம் பவுடர் சேர்க்கப்பட்ட நச்சு மசாலாப் பொருட்கள் போன்ற அபாயகரமான ரசாயனம் கலக்கப்பட்ட 25,000 கிலோவுக்கும் அதிகமான மசாலாப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 3 பேரை போலீசார கைது செய்துள்ளனர்.
உணவில் அபாயகரமான கலப்படம் இருப்பதாக ரகசிய தகவல் ஹைதராபாத் உணவு பாதுகாப்புத்துறைக்கு கிடைத்தது. காவல்துறையினருடன் இணைந்து ஹைதராபாத்தில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் வீட்டு மளிகை பொருட்கள், மசாலாப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 13 வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக இடங்களில் சோதனைக் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டது. ஹைதராபாத் காவல்துறை ஆணையர் வி.சி.சஜ்ஜனார் தலைமையில் விரிவான ஆய்வு நடந்தது..

இந்த விரிவான ஆய்வில், 2006-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தை பல நிறுவனங்கள் மீறியது அம்பலமாகி உள்ளது. முறையற்ற லேபிளிங் நடைமுறைகள் மற்றும் ஏமாற்றுப் பதப்படுத்தும் உத்திகள் ஆகியவையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அதிக அபாயகரமான மற்றும் நச்சுப் பொருட்களை மசாலாப் பொருட்களில் பயன்படுத்தும் ஆபத்தான நடைமுறைகளையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்
இதுகுறித்து ஹைதராபாத் ஆணையர் வி.சி.சஜ்ஜனார் கூறுகையில், "சோதனையின் போது ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் கலக்கப்பட்ட மொத்தம் 25 டன் எடையுள்ள பல்வேறு மசாலாப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
இந்த சம்பவம் தொடர்பாக 3 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவில் இப்படி எல்லாம் செய்வார்கள் என்று அதிர்ச்சி அளிக்கும் வகையில், செயற்கை தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் சாயங்கள் பயன்படுத்தப்பட்டதை கண்டு அதிகாரிகள் ஆடிப் போயிருக்கிறார்கள். இதில் 'புஷ் வித் சிந்தடிக் ஆரஞ்சு ரெட்' மற்றும் 'கிரீன் ஃபுட் கலர்ஸ்' ஆகியவற்றுடன், துணிச் சாயங்கள், தொழிற்துறை சார்ந்த நிரந்தர வண்ணங்கள், மின்னுவதற்காகப் பயன்படும் பவுடர் (டால்கம் பவுடர்) மற்றும் தவிட்டைப் பயன்படுத்தி எடுக்கப்படும் எண்ணெய் போன்ற நச்சுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் , தரம் குறைந்த மற்றும் நிராகரிக்கப்பட்ட கடுகுப் பொருட்களின் பளபளப்பு, எடை மற்றும் அளவைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகத் துணிச் சாயம், டால்கம் பவுடர் மற்றும் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து கலப்படம் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
வீட்டு மளிகை பொருட்களை பொருத்தவரை, கிராம்பு மற்றும் ஷாஹாஜீரா போன்ற மசாலாப் பொருட்கள் விற்பனைக்கு முன் பிரகாசமாகவும் உயர்தரமாகவும் தெரிவதற்காகச் செயற்கை வண்ணங்கள் பூசப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஷாஹாஜீரா, ஓமம் மற்றும் பல முக்கியமான மசாலாப் பொருட்களில் கலப்படம் செய்யத் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் சாயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன
விதிமீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் கடுமையான ஒழுங்குமுறை மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்கீழ் 'கொலை செய்ய முயற்சித்தல்' (culpable homicide) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹைதராபாத் ஆணையர் கூறினார்.
கலப்பட அமைப்புகளை முற்றிலும் ஒழித்து, பாதுகாப்பான, கலப்படமில்லாத உணவுப் பொருட்கள் மட்டுமே நுகர்வோரைச் சென்றடைவதை உறுதிசெய்ய இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறினார்.
H-FAST seizes 25 Tonnes of Harmful Chemical-laced #Adulterated #Spices , such as Cloves, Jeera, Ajwain, Mustard.., Arrests 3 in #Hyderabad .
— Surya Reddy (@jsuryareddy) August 4, 2026
A Major Crackdown by Hyderabad Police's #HFAST and #FoodSafety officials has exposed the alleged use of #Synthetic Colours, Industrial… pic.twitter.com/nJkZ74RTeY
இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது முதல், ஹைதராபாத் உணவுப் பொருள் கலப்படக் கண்காணிப்புக் குழு, கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து 659 சோதனைகளை நடத்தி, 202 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, சுமார் 246 டன் கலப்பட உணவைக் கைப்பற்றியுள்ளதாகப் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டு, ஹோட்டல்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 12 டன்னுக்கு அதிகமான அழுகிய கோழி மற்றும் ஆட்டு இறைச்சி, 60 டன் துர்நாற்றம் வீசும் கோழிக் கழிவுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதவிர, ஆபத்தான ரசாயனங்கள் மூலம் பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் 16 மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 25.8 டன் பழங்கள், 9.2 டன் கலப்பட ஊறுகாய் மற்றும் 3.8 டன் கலப்படத் தேயிலைப் பொடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
