பேருந்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் இலவச பயணம்.. அரசு பஸ்சில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. சர்ப்ரைஸ்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் நடந்த சம்பவம் ஒன்று, ஒட்டுமொத்த பேருக்கும் நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டக்கார குழந்தைக்கு வாழ்த்துக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.
நேற்று முன்தினம் ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்பெல்லாம் வடமாநிலங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு கொண்டிருந்த ரக்ஷா பந்தன், இப்போது தென் மாநில கிராமப்புறங்களிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ரக்ஷா பந்தன்: அந்தவகையில் தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் ரக்ஷா பந்தன் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.. இந்நிலையில், அன்றைய தினம் தெலுங்கானாவில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசு பஸ்ஸில் ஏறியிருக்கிறார்.. தன்னுடைய அண்ணனுக்கு ராக்கி கட்ட வேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய ஊருக்கு பஸ் ஏறியிருக்கிறார்..

பஸ் சென்றுகொண்டிருந்தபோதே, அவருக்கு திடீரென பிரசவ வலி வந்துவிட்டது. நடுவழியில் என்ன செய்வதென்று புரியாமல் வலியுடன் தவித்துள்ளார் அந்த பெண்.. அப்போது, பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த நர்ஸ் ஒருவர், கர்ப்பிணிக்கு உதவ முன்வந்தார்.. அதேபோல, நிலைமையை புரிந்து கொண்ட பெண் டிரைவர் பாரதியும், நர்ஸுடன் இணைந்து பிரசவம் பார்த்தார்.
கர்ப்பிணி பெண்: அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, சற்று நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது.. இதனையடுத்து உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. இப்போது தாயும் - சேயும் நலம் என்ற தகவல் வந்துள்ளது.
பிரசவ வலி வந்தவுடன் உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டிருக்கிறார் பெண் டிரைவர் பாரதி.. பஸ்ஸை வழியிலேயே நிறுத்தி, தாய் குழந்தை என இரு உயிர்களை காப்பாற்ற உதவியிருக்கும் நிலையில்,இந்த விஷயம் தெலுங்கானா முழுவதுமே பரவிவிட்டது..
சபாஷ் வாழ்த்து: இதையடுத்து, தெலுங்கானா அரசு போக்குவரத்து கழகம் பஸ்ஸில் பிறந்த அழகான பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பஸ்ஸில் இலவசமாக பயணிக்கும் விதமாக, "இலவச பயண பாஸ்" ஒன்று வழங்கப்பட்டுள்ளது.. அத்துடன், பிரசவத்திற்கு உதவியாக இருந்த நர்ஸ் அலிவேலு மங்கம்மாவுக்கும் ஒரு வருட இலவச பயண பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது பெண் டிரைவருக்கு நாலாபக்கமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.. மருத்துவமனையிலுள்ள தாய்க்கும், பிறந்ததுமே, இலவச பஸ் பாஸை பெற்றுள்ள குழந்தைக்கும் வாழ்த்துக்கள் சென்று கொண்டிருக்கின்றன...!












Click it and Unblock the Notifications