நள்ளிரவில் பயங்கரம்.. கத்தியால் மோதிக் கொண்ட இளம்பெண் - திருநங்கை.. கொலையில் முடிந்த காதல் தகராறு
ஒருகட்டத்தில், திருநங்கை மகேஸ்வரியும், இளம்பெண் அஞ்சலியும் நெருங்கி பழக தொடங்கினர். தினமும் இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேச ஆரம்பித்தனர்.
ஹைதராபாத்: ஒருதலைக் காதலால் ஏற்பட்ட தகராறு, பயங்கர கொலை வரை சென்றிருப்பது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநங்கைக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே நடந்த இந்த மோதல், ஒருகட்டத்தில் இருவரும் கத்தியால் ஒருவரையொருவர் மாறி மாறி குத்திக்கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கிறது.
இந்த பயங்கர மோதலில் இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து, அந்த திருநங்கையை தெலங்கானா போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநங்கையுடன் பழக்கம்
தெலங்கானா மாநிலம் மஞ்ச்ரியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலூரி அஞ்சலி (21). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார். அதே மருத்துவமனையில் வேலை செய்து வரும் பரமேஸ்வரியும் அஞ்சலியும் நெருங்கிய தோழிகள் ஆவர். இதனிடையே, பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி (22) என்ற திருநங்கை சகோதரி இருக்கிறார். பரமேஸ்வரியை பார்க்க அஞ்சலி அடிக்கடி அவரது அறைக்கு செல்லும் போது, திருநங்கை சகோதரியான மகேஸ்வரியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நெருக்கம் - பிரிவு..
ஒருகட்டத்தில், மகேஸ்வரியும், அஞ்சலியும் நெருங்கி பழக தொடங்கினர். தினமும் இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேச ஆரம்பித்தனர். இதையடுத்து, மகேஸ்வரியுடன் இருப்பதற்காக அஞ்சலி, தான் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு, பரமேஸ்வரி, மகேஸ்வரி தங்கியுள்ள வீட்டுக்கு குடியேறினார் . ஒரே வீட்டில் தங்கியிருந்ததால் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக மகேஸ்வரியை விட்டு அஞ்சலி சற்று ஒதுங்கியே இருந்துள்ளார். இது, மகேஸ்வரிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

வாக்குவாதம்
இந்நிலையில், நேற்று இரவு பரமேஸ்வரி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றுள்ளார். மகேஸ்வரியும், அஞ்சலியும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, அஞ்சலியிடம் மகேஸ்வரி, "ஏன் என்னிடம் பழைய மாதிரி பேசுவதில்லை" எனக் கேட்டுள்ளார். இதற்கு அஞ்சலி பதில் ஏதும் பேசவில்லை எனத் தெரிகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த மகேஸ்வரி, "இப்போதே இருவரும் திருமணம் செய்து கொள்வோம்" எனக் கூறியிருக்கிறார். இதற்கு அஞ்சலி மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கத்திச்சண்டை - மரணம்..
வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். பின்னர் இருவரும் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் இருவருக்கும் உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. இருந்தபோதிலும், அவர்கள் விடாமல் சண்டையிட்டனர். இதனிடையே, வீட்டில் இருந்து அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது, இருவரும் ரத்த வெள்ளத்தில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அஞ்சலி உயிரிழந்தார். திருநங்கை மகேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications