என்கவுண்டரா?.. சிறுமியை வன்புணர்வு செய்து கொன்றவர் ரயிலில் விழுந்து சாவு- போலீஸ் சேஸிங்கில் மர்ம பலி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சிறுமியை வன்புணர்வு செய்து கொன்றதற்காக தேடப்பட்டு வந்த நபர் தற்போது ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டு எடுக்கப்பட்டுள்ளார். இவரை போலீசார் என்கவுண்டர் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மர்மமான முறையில் இவர் பலியாகி உள்ளார்.
ஹைதராபாத்தை உலுக்கிய பாலியல் வன்புணர்வு வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ஹைதராபாத் அருகே இருக்கும் சிங்கரேணி காலனி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். 6 வயது சிறுமி மாலை வீட்டை விட்டு விளையாட வெளியே சென்றார்.
இந்த நிலையில் இரவு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் பெற்றோர் அவரை தேடி உள்ளனர். கடந்த 10ம் தேதி அந்த சிறுமி காணாமல் போன நிலையில் மறுநாள் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கானா போலீசார் இதில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கண்டுபிடிப்பு
இந்த நிலையில் கடந்த 12ம் தேதி அதே பகுதியில் பூட்டிய நிலையில் இருந்த வீடு ஒன்றில் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அந்த வீட்டில் பள்ளிக்கொண்டா ராஜு என்ற நபர் வசித்து வந்தார். பள்ளிக்கொண்டா ராஜுவிற்கு 30 வயதாகிறது. இவரின் வீட்டில் உடலில் மோசமான காயங்களோடு, பல இடங்களில் ரத்தங்களோடு சிறுமி பெட் சீட் சுற்றப்பட்டு பலியாகிக் கிடந்தார். இதையடுத்து அந்த சிறுமியின் உடல் உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பிரேத பரிசோதனை
பிரேத பரிசோதனை முடிவில் அந்த சிறுமி பல முறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டில் வசித்து வந்த பள்ளிக்கொண்டா ராஜு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் தன்னை தேடுவதை தெரிந்து கொண்டு பள்ளிக்கொண்டா ராஜு தலைமறைவானார். இவரை குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

10 லட்சம் ரூபாய்
இந்த நிலையில்தான் தேடப்பட்டு வந்த பள்ளிக்கொண்டா ராஜு தற்போது ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டு எடுக்கப்பட்டுள்ளார். இவரை போலீசார் என்கவுண்டர் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மர்மமான முறையில் இவர் பலியாகி உள்ளார். தெலுங்கானாவில் உள்ள கானபூர் பகுதியில் இவரின் ரயில்வே தண்டவாளத்தில் இவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இவரை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

திருப்பம்
இந்த நிலையில் தனிப்படையினர் அவரை துரத்தி செல்லும் போது அவர் வேகமாக தண்டவாளத்தில் ஏறி ஓடி இருக்கிறார். அப்போது போலீஸ் இவரை நிற்க சொல்லியும் கேட்காமல் ரயிலில் விழுந்து இவர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது இன்னும் மர்மமாக இருக்கிறது. இதுகுறித்து முழு விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. முன்பே இவரை என்கவுண்டர் செய்யும் திட்டத்திலும் ஹைதராபாத் போலீஸ் இருப்பதாக கூறப்பட்டது. அவர் ஒரு கொலையாளி, சிறுமியை வன்புணர்வு செய்து கொன்றுள்ளார்.

உத்தரவு
அவரை பிடித்ததும் என்கவுண்டர் செய்ய உத்தரவிட்டு உள்ளோம் என்று தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் தற்போது அவர் மர்மமான முறையில் பலியாகி உள்ளார். இதனால் இவரின் மரணத்திற்கு பின் வேறு ஏதேனும் விஷயம் நடந்து இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications