நட்புனா இதுதான்.. ஆனால் இப்படி தான் நிரூபிக்கனுமா! 3 நாளில் 3 பேர் தற்கொலை.. ஹைதராபாத்தில் விபரீதம்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ஒரே வகுப்பில் படித்த இரண்டு இளம் பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்குரிய காரணம் குறித்து விசாரித்த போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியானது.
உலகத்தில் பணம் பெரிது, காதல் பெரிது, நட்பு பெரிது என பலரும் பலவிதமான கருத்துக்களை கூறுவார்கள். சிலருக்கு காதல் பெரிது என்றாலும், அனைவரும் பொதுவாக நட்பையே குறிப்பிடுவார்கள். நட்புக்கு உதாரணமாய் பல சம்பவங்களை சொல்லலாம்.
அப்படி ஒரு சம்பவம் தான் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அரங்கேறி இருக்கிறது. ஆனால் இதுபோல யாரும் விபரீத முடிவு எடுக்கக் கூடாது என்பதை அனைவரின் எண்ணமாக உள்ளது. ஹைதராபாத் அருகே பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்த இரு இளம் பெண்களும் ஒரு இளைஞனும் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஹைதராபாத் சோகம்
போலீசார் நடத்திய விசாரணையில் தான் தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிய வந்திருக்கிறது. ஹைதராபாத் அருகே உள்ள ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் அருகே துங்கடா கிராமத்தில் தான் அந்த சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த வைஷ்ணவி, ஸ்ரீஜா, ராகேஷ் ஆகியோர் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்திருக்கிறார்கள். தொடர்ந்து தற்போது வரை அவர்களது நட்பு தொடர்ந்து வந்தது.
வைஷ்ணவி மரணம்
சில தினங்களுக்கு முன்பு வைஷ்ணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லிவிட்டு, குளிக்க சென்று இருக்கிறார். அவருடன் மருத்துவமனைக்கு செல்லலாம் என பெற்றோர்கள் கூறிய போது குளித்துவிட்டு வருவதாக சொன்ன வைஷ்ணவி அவரது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வைஷ்ணவி வீட்டில் இருந்த ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
ராகேஷ் மரணம்
தொடர்ந்து அவர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவர் உயிரிழந்தது உறுதியானது. இந்த நிலையில் வைஷ்ணவியின் நண்பரான 21 வயதான ராகேஷ் அன்று இரவு 10:30 மணியளவில் தனது வீட்டில் தூங்க செல்வதாக கூறியுள்ளார். காலையில் வீட்டை சுத்தம் செய்ய அவரது பெற்றோர் சென்றபோது ராகேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் இருவரது தோழியான ஸ்ரீஜா வீட்டில் அறையை பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஸ்ரீஜா தற்கொலை
அவரது வாய் பேச முடியாத சகோதரி இதுகுறித்து தாயாரிடம் சைகை மூலம் தெரிவித்துள்ளார். அவர் சென்ற போதுதான் வீட்டில் வைஷ்ணவி, ராகேஷ் போலவே, ஸ்ரீஜாவும் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மூவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மூவரின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.
போலீஸ் விசாரணை
வைஷ்ணவி இறந்த தகவலை கேட்டு ராகேஷ் தற்கொலை செய்து கொண்டதும், இருவரது தற்கொலை செய்தியை கேட்ட ஸ்ரீஜா அவர்களது பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இருந்த போதும் உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications