விண்வெளித்துறையில் புதிய மைல் கல்.. ஸ்பேஸ் டாக்கிங்க்! 7 ஆம் தேதி இஸ்ரோ செய்யும் சாதனை!
ஹைதராபாத்: இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. SDX-1 மற்றும் SDX-2 என்ற விண்கலன்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், டாக்கிங்க் பணி நாளை முதல் தொடரும் என்றும், அதன்பிறகு படிப்படியாக பல்வேறு நடைமுறைகள் தொடர்ந்து நடைபெறும். கடைசி கட்ட டாக்கிங்க் என்பது வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 220 கிலோ எடை கொண்ட SDX-1 மற்றும் SDX-2 எனப்படும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் பாய்ந்தன.

இவை 470 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதைகளில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. இந்த 2 ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 24 ஆய்வுக் கருவிகள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் போயம்-4 எனப்படும் நான்காம் நிலையில் இந்த ஆய்வுக் கருவிகள் இருக்கும். இதில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ தயாரித்தவை.
எஞ்சிய 10 கருவிகளும் கல்வி நிறுவனங்களும் பிற தனியார் நிறுவனங்களும் தயாரித்தவை. விண்ணில் ஏவப்பட்ட இந்த 2 சிறிய செயற்கைக்கோள்கள் சந்திப்பதற்கும், இணைவதற்கும், பிரிவதற்கும் தேவையான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் முயற்சிக்கு இது மிகவும் முக்கியமானது.
விண்வெளி ரோபா போன்ற எதிர்காலப் பயன்பாடுகளுக்கும், விண்வெளியில் மட்டுமின்றி தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தும் விண்கலங்கள், செயற்கைக்கோள்களை கட்டுப்படுத்துவதற்கும் இந்த தொழில்நுட்பம் ரொம்பவே முக்கியமானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தொழில் நுட்பம் வைத்துள்ளன.
விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக முடித்து விட்டால், விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவும் புதிய வரலாறு படைக்க உள்ளது. வரும் 7-ஆம் தேதி இந்த இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் முக்கியமான பணியான டாக்கிங்க் என்பது மிகவும் முக்கியமான பணியாக கருதப்படுகிறது.
ஹாலிவுட் படத்தில் கூட இதுபோன்ற சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இண்டர்செல்லர் படத்தில், இந்த 'டாக்கிங்' செயல் எவ்வளவு கடினமானது என்பதை காட்டியிருப்பார்கள். வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு மையத்தை நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்.எல்.வி.சி 60 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 2 செயற்கை கோள்களும் வரும் ஜனவரி 7 ஆம் தேதி விண்ணிலேயே இணைக்கப்பட உள்ளது. மிகவும் சவாலான தொழில் நுட்பம் கொண்ட இந்த பணிகள் வெற்றிகரமாக முடிந்தால் இந்திய விண்வெளி துறையில் புதிய மைல் கல்லாக இருக்கும்.
இது பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சந்திரயான் 4 விண்கல திட்டத்திற்கு இந்த டாக்கிங்க் டெக்னலாஜி முக்கியத்துவம் வாய்ந்தது. டாக்கிங்க் பணி நாளை முதல் தொடரும். அதன்பிறகு படிப்படியாக பல்வேறு நடைமுறைகள் தொடர்ந்து நடைபெறும். கடைசி கட்ட டாக்கிங்க் என்பது வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications