இந்தியாவின் பணக்கார மாநிலம் எது தெரியுமா? கர்நாடகா நம்பர் 1.. அப்போ தமிழகம், தெலுங்கானா எங்கே?
ஹைதராபாத்: மாநிலம் வாரியாக தனிநபர் வருமானம் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை கர்நாடகா முதலிடத்தில் இருக்கும் நிலையில், தெலுங்கானா 2ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த லிஸ்டில் தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்கள் எங்கே உள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்திய மாநிலங்கள் எந்தளவுக்கு பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்கிறது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2025-26 ஆண்டிற்கான பட்டியல் "Handbook of Statistics on the Indian Economy" என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கானா
அதில் நாட்டின் சிறந்த பொருளாதார வளர்ச்சியை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தெலுங்கானா உருவெடுத்துள்ளது. குறிப்பாக, தெலுங்கானா மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஓராண்டில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிக்கையை குறிப்பிட்டுள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு தெலுங்கானா மிக பெரியளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரேவந்த் ரெட்டி
இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில், "கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மாநிலத்தின் தனிநபர் வருமானம் சுமார் ₹38,900 உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தது, புதிய முதலீடுகளை ஈர்த்தது, வேலைவாய்ப்புகளை அதிகரித்தது, அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்தது, கொள்கை சார்ந்து சரியான முடிவுகளை எடுத்தது ஆகியவையே இந்த வளர்ச்சிக்கு காரணம்.
கடந்த 10 ஆண்டுகளில் பிஆர்எஸ் அரசு செய்த தவறுகளால் தெலுங்கானா கடும் பின்னடைவை சந்தித்து இருந்தது. ஆனால், அந்த தவறுகளை நாங்கள் சரி செய்துள்ளோம். காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கைகளால் தெலுங்கானா மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை வந்துள்ளது. பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தான் இதன் மூலம் மிக பெரியளவில் பலன் அடைந்துள்ளனர். வரும் ஆண்டுகளிலும் தெலுங்கானா இன்னும் அதிக வளர்ச்சியை பதிவு செய்யும்" என்று பதிவிட்டுள்ளார்.
தெலுங்கானா ஜிடிபி
2025-26ஆம் ஆண்டில் தெலுங்கானாவின் மாநில ஜிடிபி ₹16,14,771 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024-25ஆம் ஆண்டில் ₹14,57,913 கோடியாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநில பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.. 2021-22ஆம் ஆண்டில் ₹10,17,251 கோடியாக இருந்த தெலுங்கானா மாநில பொருளாதாரம் தற்போது ₹16 லட்சம் கோடியை உயர்ந்துள்ளது.
குறிப்பாக தனிநபர் வருமானமும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. 2024-25ஆம் ஆண்டில் ₹3,80,031 ஆக இருந்த தனிநபர் வருமானம், 2025-26ஆம் ஆண்டில் ₹4,18,931ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஓரே ஆண்டில் தனிநபர் வருமானம் 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.. 2021-22ஆம் ஆண்டில் இந்த தனிநபர் வருமானம் ₹2,69,000ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் வருமானம்
இப்போது தனிநபர் வருமான அடிப்படையில் பார்த்தால் ₹4,33,326 வருமானத்துடன் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தை தெலுங்கானா தான் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (₹4,08,027), குஜராத் (₹3,57,531), மகாராஷ்டிரா (₹3,47,903) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (₹2,94,507) மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மாநில பொருளாதாரத்தின் அளவை பொருத்தவரை, ₹16,14,771 கோடி மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் தெலுங்கானா நாட்டில் 7வது இடத்தை பிடித்துள்ளது. மகாராஷ்டிரா ₹44,84,537 கோடி மதிப்பில் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தொழில்துறை வளர்ச்சி, ஐடி சர்வீஸ் துறை விரிவாக்கம் காரணமாக.. பெரிய மாநிலங்களை காட்டிலும் தெலுங்கானா தனிநபர் வருமானத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.


Click it and Unblock the Notifications
