"35" டாப் தலைகள்.. தட்டி தூக்க ரெடியாகும் காங்கிரஸ்.. கையை பிசையும் கேசிஆர்! தெலங்கானாவில் ட்விஸ்ட்
ஹைதராபாத்: தெலங்கானாவில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு காங்கிரஸில் பல தலைவர்கள் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் என 5 மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த சட்டசபைத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படும்.
இதில் தெலங்கானாவில் கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கே காங்கிரஸ் கட்சி ஒரு வலுவான கம்பேக்கை கொடுப்பதில் உறுதியாக உள்ளது.

தெலங்கானா: காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அங்கே உள்ள ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தனது கட்சியுடன் காங்கிரஸில் செல்ல ஐக்கியமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகளும் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஆவார். ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்று தனிக் கட்சி உருவானது. அவர் தான் காங்கிரஸில் ஐக்கியமாக உள்ளது.
இது தவிர இன்று கேசிஆர் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 12 பேர் காங்கிரஸில் ஐக்கியமானார். இது தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது இத்துடன் முடியாதாம். வரும் காலங்களில் மேலும் பல பிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் காங்கிரஸில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சியில் இருந்து 35 முக்கியத் தலைவர்கள் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் சேர உள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸில் ஐக்கியம்: பிஆர்எஸ் கட்சியின் பொங்குலேடி ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணராவ் தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர். இரு தலைவர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஜூலை முதல் வாரத்தில் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் சேர்வார்கள் எனத் தெரிகிறது.
ஜூலை முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிஆர்எஸ் மற்றும் பாஜகவில் இருந்து மேலும் சில தலைவர்கள் கட்சியில் சேருவார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கேசிஆர்: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள தேர்தலில் கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் பிஆர்எஸ் களமிறங்குகிறது. 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா உருவானது. அப்போது தெலங்கானா மாநில மக்களால் ஹூரோ போல கேசிஆர் பார்க்கப்பட்டார். 119 இடங்களைக் கொண்ட தெலங்கானாவில் கடந்த 2014இல் கேசிஆர் கட்சி 63 இடங்களில் வென்ற நிலையில், 2018இல் கேசிஆர் கட்சி 88 இடங்களைக் கைப்பற்றியது.
2018 சட்டசபைத் தேர்தலில் கேசிஆர் கட்சி 46.87% வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியாக 28.43% வாக்குகளை மட்டுமே பெற்றது. அடுத்து ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி 7 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் வென்றது. இருப்பினும் மாநிலத்தில் அதிருப்தி அதிகமாக உள்ளதால் கேசிஆர் 3ஆவது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் காங்கிரஸ் தனது கட்சியை அங்கே வலுப்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications