இன்ஜினியரிங் படித்தவர்கள் வீணாப்போனவர்கள்.. ஒன்றுமே தெரியாது.. தெலங்கானா முதல்வர் சர்ச்சை
ஹைதராபாத்: ''இன்ஜினியரிங் படித்தவர்கள் வீணாப்போனவர்களாக உள்ளனர். அவர்களில் பலருக்கும் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பம் கூட நிரப்ப தெரியாது'' என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தெலங்கனாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் ஹைதராபாத்தில் நடந்த விழாவில் நேற்று ரேவந்த் ரெட்டி பேசினார். அப்போது அவர் வேலைவாய்ப்பு தொடர்பாக பேசினார்.

இந்த சமயத்தில் இன்ஜினியரிங் படித்தவர்கள் பற்றியும், அவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பது தொடர்பாகவும் அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதுபற்றி ரேவந்த் ரெட்டி கூறியதாவது:
''என்னை பொறுத்தவரை கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை இரு கண்கள். ஒவ்வொரு ஆண்டுகள் இன்ஜினியரிங் படிப்பை ஏராளமானவர்கள் படித்து முடிக்கின்றனர். மாநிலத்தில் 1.10 லட்சம் பேர் இன்ஜினியரிங் படிப்பை முடிக்கின்றனர். ஆனால் அவர்களில் பலருக்கும் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பம் கூட நிரப்ப தெரியாமல் உள்ளனர்.
நீங்கள் (ஆசிரியர்கள்) ஒரு வெற்று பேப்பரை இன்ஜினியரிங் படித்தவர்களிடம் கொடுத்து வேலைவாய்ப்புக்கு விண்ணப்பம் செய்யும் வகையில் எழுதும்படி சொல்லுங்கள். அவர்களால் முடியாது. அவர்கள் வீணாகப்போனவர்கள். அவர்களால் சின்ன வேலைக்கு கூட போகமுடியாது. ஏனென்றால் அவர்கள் இன்ஜினியரிங் படிப்பை படித்தவர்கள். அவர்கள் திறமையை கற்றுக்கொள்வது இல்லை'' என்று கூறினார்.
ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. பிஆர்எஸ் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கேடி ராமராவ் கூறுகையில், ''ரேவந்த் ரெட்டி தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு போட்டி தேர்வையாவது எழுதியுள்ளாரா? வேலைக்காக அவர் ஏதாவது ஒரு இண்டர்வியூவில் பங்கேற்றுள்ளாரா? ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றி உள்ளாரா?'' என கேள்வி எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் என்வி சுபாஷ் கூறுகையி்ல, ''காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களை முட்டாள் என்று கூறுகின்றனர். அந்த வரிசையில் இன்ஜினியரிங் படித்தவர்கள் வீணாக போனவர்கள் என்று ரேவந்த் ரெட்டி செல்லி இருக்கிறார். உண்மையில் இன்ஜினியரிங் படித்தவர்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆனால் அவர்களை காங்கிரஸ் அவமானப்படுத்தி பெருங்குற்றம் செய்துள்ளது. ஜென்-ஸி என்று அழைத்து கொண்டவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்களா? இல்லாவிட்டால் தங்களின் எஜமானர்களிடம் இருந்து உத்தரவு வரும்வரை காத்திருப்பார்களா?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையடுத்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்தார். அதில் நான் இன்ஜினியரிங் கல்வி முறையை தான் சரியில்லை என்று கூறினேன். இன்ஜினியரிங் மாணவர்களை நான் விமர்சனம் செய்யவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications
