பலாத்காரம்.. நெறிக்கப்பட்ட கழுத்து? பிரபல தமிழ் நடிகை தற்கொலை வழக்கில் சிக்கிய காதலன்! என்ன நடந்தது
ஹைதராபாத்: 2002ஆம் ஆண்டு நடிகை பிரத்யுஷாவின் மரணம் தொடர்பான வழக்கு, சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் முடிவுக்கு வந்துள்ளது. பிரத்யுஷா பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், அந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேநேரம் பிரத்யுஷாவை தற்கொலைக்கு தூண்டிய சித்தார்த்த ரெட்டிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முக்கிய இளம் நடிகையாக வலம்வந்தவர் நடிகை பிரத்யுஷா. 2002 பிப்ரவரி 23ஆம் தேதி பிரத்யுஷா பெங்களூர் செல்ல ரெடியாகி கொண்டு இருந்தார். கன்னட திரைப்படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்ததாக தெரிகிறது. 1998ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான அவர், அடுத்த நான்கு ஆண்டுகளில் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 12 படங்களில் நடித்திருந்தார்.

யார் இவர்
தெலுங்கானாவின் தற்போதைய புவனகிரி பகுதியில் பிறந்த பிரத்யுஷா, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாய் சரோஜினி தேவி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த பிரத்யுஷா, தனியார் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று போட்டியில் பங்கேற்று "Ms லவ்லி ஸ்மைல்" பட்டம் பெற்றார். அதுவே அவரை திரைத்துறைக்கும் அழைத்து வந்தது.
திரைத்துறையில் வளர்ந்து வந்த பிரத்யுஷா பொறியியல் மாணவரான குடிபள்ளி சித்தார்த்த ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய விரும்பிய நிலையில், சித்தார்த்த ரெட்டியின் குடும்பத்தினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. கடந்த 2002 பிப்ரவரி 23ஆம் தேதி, திருமணம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து தனது தாயார் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதை பிரத்யுஷாவிடம் சித்தார்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
அதைத் தொடர்ந்து இருவரும் பூச்சி மருந்தை உட்கொண்டனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சித்தார்த் உயிர் பிழைத்தார். இருப்பினும், பிரத்யுஷா சிகிச்சையின்போது உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், காதலர்கள் இணைந்து எடுத்த தற்கொலை முடிவாகவே இது பார்க்கப்பட்டது. ஆனால் பிரத்யுஷாவின் தாய் சரோஜினி தேவி, தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
அப்போது பிரத்யுஷாவின் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் பி. முனிஸ்வாமி, அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கருத்து தெரிவித்ததாகவும், பாலியல் வன்கொடுமையை நிராகரிக்க முடியாது என்றும் கூறியதாகவும் திடீரென தகவல்கள் பரவின. இதனால் தற்கொலைக்கு பதிலாக கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் பெற்றன. இருப்பினும், எய்ம்ஸ் மருத்துவர் குழு நடத்திய சோதனையில், அவரது கழுத்து நெரிக்கப்படவில்லை என்றும் அவர் விஷம் உட்கொண்டதே மரணத்துக்கு காரணம் என சுட்டிக்காட்டின.
சிக்கிய காதலன்
பிரத்யுஷாவின் மரணம் தொடர்பாக சித்தார்த்த ரெட்டி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தது. 2004ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம், இந்திய தண்டனை சட்டத்தின் 306ஆவது பிரிவின் கீழ் சித்தார்த்த ரெட்டியை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தற்கொலைக்கு முயன்ற குற்றத்திலும் அவர் தண்டிக்கப்பட்டார். 2011 டிசம்பரில் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் அவரது குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், தற்கொலைக்கு தூண்டியதற்கான சிறை தண்டனையை 5 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாகக் குறைத்தது. அபராதத்தையும் ரூ.50 ஆயிரமாக உயர்த்தியது.
2026 பிப்ரவரி 17ஆம் தேதி நீதிபதிகள் ராஜேஷ் பிந்தல் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. மருத்துவமனை பதிவுகள், தடயவியல் ஆதாரங்கள் மற்றும் நிபுணர்களின் மருத்துவ கருத்துகளை ஆய்வு செய்த நீதிமன்றம், பிரத்யுஷா விஷம் குடித்ததாலேயே உயிரிழந்ததாக முடிவு செய்தது. கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம் ஏற்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை என்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தண்டனை
அதேநேரம் சித்தார்த்த ரெட்டி தான் தற்கொலைக்கு தூண்டினார் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பிரத்யுஷாவின் தற்கொலை முடிவுக்கு உளவியல் ரீதியாக சித்தார்த்த ரெட்டி தூண்டியதாக சொல்லி உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.
பிரத்யுஷா இறப்பதற்கு முன்பு தனது கன்னட படம் ஒன்றில் நடிக்க பெங்களூர் சென்று கொண்டு இருந்தார். அவர் நடிப்பில் உருவான தெலுங்கு திரைப்படமான ஒன்று இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. அவர் தமிழில் நடித்திருந்த சவுண்டு பார்ட்டி, அவரது கடைசி படமாக அவர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டு வெளியானது.


Click it and Unblock the Notifications
