ஐயப்ப சாமிக்கு மாலையிட்டதால் அனுமதியில்லை.. ஊழியரை வெளியே நிறுத்திய டிசிஎஸ்! போராட்டம் - பரபரப்பு
ஹைதராபாத்: ஐயப்ப சாமிக்கு மாலையிட்டு விரதம் கடைப்பிடிக்கும் ஊழியரை பணிக்கு அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாக டிசிஎஸ் ஐடி நிறுவனம் மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் அடிபட்லாவில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தில் என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

தெலுங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் அடிபட்லாவில் டிசிஎஸ் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மணிஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது சபரிமலை ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து வருகிறார்.
இதனால் அவர் கழுத்தில் மாலை மற்றும் கருப்பு உடை அணிந்து நிறுவனத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நிறுவனத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த ஐயப்ப பக்தர்கள் குழு மற்றும் இந்து அமைப்பினர் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஐயப்பா சாமிக்கு மாலை அணிந்து விரதம் கடைப்பிடிக்கும் ஊழியரை நிறுவனத்துக்குள் அனுமதிக்க வேண்டும். அவரை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
అయ్యప్ప మాల ధరించిన ఉద్యోగికి షాక్.. TCS ఆఫీస్లోకి అనుమతి నిరాకరణ..!!#TCS #TCSEmployee #AyappaMala #NewsUpdate #OIReels #Oneindiatelugu https://t.co/yLxWd8cv7T
— oneindiatelugu (@oneindiatelugu) November 20, 2026
இதையடுத்து போலீசார் வந்து சமாதானம் செய்து போராட்டக்காரர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட டிசிஎஸ் நிறுவன ஊழியர் மணிஷ் கூறுகையில், ''நான் இந்த நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஐயப்ப சாமிக்கு மாலை அணிய உள்ளது பற்றி நிறுவனத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே தகவல் தெரிவித்தேன். ஆனால் இப்போது அவர்கள் நிறுவனத்தின் உள்ளே அனுமதி மறுக்கின்றனர்.
நிறுவனத்துக்கு என்று 'டிரஸ்கோட்' உள்ளது. அதை அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்போம் என்கின்றனர். ஆனால் மற்றவர்கள் வேறு உடை அணிந்து 'டிரஸ்கோட்' முறையை பின்பற்றாமல் இருந்தாலும் அவர்களை அனுமதிக்கின்றனர். ஆனால் ஐயப்ப சாமிக்கு மாலை அணிந்த பிறகு என்னை மட்டும் தடுக்கின்றனர். இதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை'' என கூறியுள்ளார்.
இதுபற்றி அடிபட்லா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஐயப்பா சாமிக்கு மாலை அணிந்த ஊழியரை டிசிஎஸ் நிறுவனம் உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறி ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஊழியர் ஒருவர் புகாரில் இந்த போராட்டம் நடந்தது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. இதுபற்றி இன்னும் யாரும் எங்களிடம் புகார் அளிக்கவில்லை. சொல்லப்படும் குற்றச்சாட்டின் உண்மை தன்மை பற்றி நாங்களே விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.


Click it and Unblock the Notifications
