தேர்தலில் போட்டியிடாத கட்சி எதுக்கு? தெலுங்கானா தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் திடீர் ராஜினாமா!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் கட்சி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் கசானி ஞானேஷ்வர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த களத்தில் பாஜகவும் நிற்கிறது.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள். இதனால் தெலுங்கானா தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானா தேர்தலில் ஆந்திரா எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்குதேசம் 2 தொகுதிகளில் மட்டும் வென்றது. மொத்தம் 3.51% வாக்குகளை தெலுங்குதேசம் பெற்றிருந்தது.
தெலுங்கானா தேர்தலில் போட்டி இல்லை: ஆந்திராவில் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் தெலுங்குதேசம்- ஜனசேனா கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவும் இணையும் என கூறப்படுகிறது. இக்கூட்டணியில் உள்ள ஜனசேனா, தெலுங்கானா தேர்தலில் 32 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. ஆனால் தெலுங்குதேசம் கட்சியோ தெலுங்கானா தேர்தலிலேயே போட்டியிடவில்லை என திடீரென அறிவித்துவிட்டது. இது தெலுங்கானாவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தெலுங்கு தேசம் அதிர்ச்சி: இந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் கசானி ஞானேஷ்வர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தெலுங்கானா தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி போட்டியிடும் என ஏற்கனவே கசானி அறிவித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமை அறிவித்த முடிவை ஏற்க முடியாது என கூறி தமது மாநில தலைவர் பதவியை மட்டுமல்லாமல் கட்சியில் இருந்தே கசானி ஞானேஷ்வர் ராஜினாமா செய்துவிட்டார்.
திடீர் விலகல்: இது தொடர்பாக கசானி ஞானேஷ்வர் கூறுகையில், தெலுங்கானா தேர்தலில் போட்டியிட தெலுங்கானா தெலுங்கு தேசம் கட்சி முழு அளவில் தயாராக இருந்தது. ஆனால் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இப்போது தேர்தலிலேயே போட்டியிடவில்லை என அறிவித்திருக்கிறது. இது தெலுங்கு தேசம் கட்சியினருக்கு அநீதி இழைப்பதாகும். அதனால் தெலுங்கானா மாநில தலைவர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன் என்றார். அத்துடன் தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அறிவிப்பேன் என்றும் கசானி ஞானேஷ்வர் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான முன்னாள் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் தெலுங்கு தேசம் கட்சி திக்கு தெரியாத காட்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதையே கசானி ஞானேஷ்வரின் முடிவு வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications