ஹைதராபாத்தில் மெஸ்ஸி.. கைகுலுக்கி வரவேற்றார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!
ஹைதராபாத்: ஹைதராபாத் வந்தடைந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வரவேற்றார். ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் மெஸ்ஸியின் 'தி கோட் டூர் 2025' நிகழ்வில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். மேலும் அவரது இன்டர் மியாமி அணி வீரர்களான லூயிஸ் சுவாரெஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் இந்தியா வருகை தந்துள்ளனர். அதிகாலை தனி விமானம் மூலம் கொல்கத்தா வந்தடைந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி கலந்து கொண்டார்.

தொடர்ந்து இன்று மாலை ஹைதராபாத் வந்த லியோனல் மெஸ்ஸியை, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வரவேற்றார். உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு மெஸ்ஸி தலைமையிலான 'அபர்ணா-மெஸ்ஸி ஆல் ஸ்டார்ஸ்' மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான 'சிங்கரேணி ஆர்ஆர்9' அணிகளுக்கு இடையிலான நட்புரீதியான போட்டியானது நடைபெறுகிறது. இரு அணிகளும் 15-20 நிமிடங்கள் நட்புரீதியான போட்டியில் விளையாடவுள்ளன.
இந்த போட்டிக்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த சில நாட்களாக நகரின் பல்வேறு மைதானங்களில் கால்பந்து வீரர்களுடன் கடுமையாக பயிற்சி மேற்கொண்டார். இந்த போட்டி மெஸ்ஸியின் 'தி கோட் டூர் 2025' ஒரு பகுதியாக உள்ளது. இந்த நிலையில், இந்த போட்டியைக் காண மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஹைதராபாத் வருகை தருகிறார்.
தனி விமானம் மூலம் ஹைதராபாத் வரும் ராகுல் காந்தி, மெஸ்ஸி தங்கியிருக்கும் தாஜ் பலக்னுமா பேலஸ் ஹோட்டலுக்குச் சென்று அங்கு அவரை சந்திக்கவுள்ளார். அதன் பின் மெஸ்ஸி- ரேவந்த் ரெட்டி இடையேயான நட்புரீதியிலான ஆட்டத்தை பார்க்கும் ராகுல் காந்தி, இரவு 10.30 மணிக்கு டெல்லி செல்வார்.
மெஸ்ஸி பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 39,000 பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ராஜீவ் காந்தி மைதானத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications