‛ஹை மார்ஜின்’ .. நபிகள் பற்றி அப்படி சொன்னரே.. தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீண்டும் வெற்றி
ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசி கைது செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜா சிங் எம்எல்ஏ மீண்டும் கோஷா மஹால் தொகுதியில் போட்டியிட்டு கடந்த முறையை விட அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தெலங்கானாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. தெலுங்கானாவில் தற்போது பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகராவ் உள்ளார். தெலங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இடையே நான்கு முனை போட்டி உள்ளது.
இந்த தேர்தலில் பாஜகவின் சர்ச்சை எம்எல்ஏவான டி ராஜா சிங் கோஷா மஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் நபிகள் நாயகம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் ராஜா சிங் எம்எல்ஏவை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்து மேலிடம் உத்தரவிட்டது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முன்பாக அவர் மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டார். அதோடு கோஷா மஹால் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்றைய ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ராஜாசிங் எம்எல்ஏ பின்னடைவை சந்தித்தார். அதன்பிறகு அடுத்தடுத்து சுற்றுகளில் முன்னேற தொடங்கினார்.
இறுதியாக ராஜாசிங் எம்எல்ஏ கோஷாமஹால் தொகுதியில் 80,182 ஓட்டுகள் பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் நான்ட் கிசோர் வியாஸை விட 21,457 ஓட்டுகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏவாகி உள்ளார்.
இந்த தொகுதியில் ராஜாசிங் எம்எல்ஏ கடந்த 2014, 2018 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். கடந்த முறை 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜாசிங் எம்எல்ஏ இந்த முறை கூடுதல் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வாகை சூடியுள்ளார்.












Click it and Unblock the Notifications