ஓவைசிக்கு ஷாக்.. முஸ்லிம் தொகுதிகளிலும் பாஜக மாஸ்! தெலுங்கானாவில் எத்தனை இடத்தில் வெற்றி தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளிலும் கூட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியை விட பாஜக, காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பாஜக முந்தைய முறையை விட அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
2014ல் புதிய மாநிலமாக ஆந்திராவில் இருந்து தெலுங்கானா உருவானது. 2014, 2018 ஆகிய 2 ஆண்டுகள் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த 2 தேர்தலிலும் பிஆர்எஸ் கட்சி தான் வெற்றி பெற்ற நிலையில் அதன் தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தான் தெலுங்கானா சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது. மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. 71 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
இன்று காலை முதல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. பாஜக 8 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் தான் தெலுங்கானாவில் ஹைதராபாத் பிராந்தியத்தில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு மொத்தம் 21 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாறாக மாநிலம் முழுவதும் எடுத்து கொண்டால் தெலுங்கானாவில் 41 சட்டசபை தொகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த 41 தொகுதிகளில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியை விட பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி பார்த்தால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 41 தொகுதிகளில் அதிகபட்சமாக ‛அவுட்கோயிங்' முதல்வரான சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி 18 இடங்ளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தலா 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 7 தொகுதிகளில் மட்டுமே ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications