காலையில் கடத்தல் பிளான், மாலையில் திருமண வீடியோ.. அப்பாவுக்கு விபூதி அடித்த மகள்.. என்ன நடந்தது
ஹைதராபாத்: தெலங்கானாவில் 18 வயதே ஆன இளம்பெண் கடத்தப்பட்ட வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்த நிலையில், அதில் மெகா ட்விட்ஸ்ட் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதிலும் காதல் மற்றும் ஒரு தலைக் காதல் சம்பவங்களால் ஏற்படும் பகீர் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைப் பார்க்க முடிகிறது.
இதற்கிடையே தெலங்கானா மாவட்டத்தில் நடந்த ஒரு கடத்தல் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் லீக்காகி பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இருப்பினும், சில மணி நேரத்தில் அந்தச் சம்பவத்தில் மிகப் பெரிய ஒரு ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா
தெலங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டம் முட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரய்யா. இவர் தனது மகள் ஷாலினியுடன் இன்று காலை அதே ஊரில் இருக்கும் அஞ்சிநேயர் கோயிலுக்குச் சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு கோயிலுக்கு வெளியே இருவரும் வந்த நிலையில், திடீரென அங்கு காரில் காத்திருந்த நான்கு பேர் ஷாலினியை வலுக்கட்டாயமாகக் கடத்தி சென்றனர். இதைத் தடுக்க முயன்ற சந்திரய்யாவையும் அவர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை காரில் ஏற்றி அவர்கள் கடத்தி சென்றனர்.

போலீசார்
இந்த ஒட்டுமொத்த சம்பவமும் மொத்தமே சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.. இதனால் செய்வதறியாமல் குழம்பிய சந்திரய்யா, அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கினர். அருகே உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் அவர்கள் கடத்திச் செல்லப்பட்ட வீடியோ தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதையடுத்து அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.

மணக் கோலத்தில் வீடியோ
இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத ஒரு மெகா ட்விட்ஸ்ட் நடந்துள்ளது. கடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்த இளம் பெண் மணக்கோலத்தில் ஒரு ஆணுடன் ஜோடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை கடத்தியவர்களில் ஒருவர் தனது காதலன் என்றும் அவரை திருமணம் செய்து கொண்டதாக வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மேலும், "எங்களுக்கு இருவருக்கும் இடையே கடந்த ஓராண்டிற்கு முன்பே திருணமாகிவிட்டது. அப்போது நான் மைனர்.. எனக்கு 18 வயதாகவில்லை.

உயிருக்கு ஆபத்து
இதனால் எனது திருமணத்தை ஒப்புக் கொள்ளாத எனது பெற்றோர் எனது கணவர் மீது பாலியல் வழக்கு கொடுத்தனர். இதனால் அவர் கைதாகி சிறையில் எல்லாம் இருக்க நேர்ந்தது. ஆனால், இப்போது எனக்கு 18 வயதாகவிட்டது. நான் மேஜர் என்பதால் இப்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். என் கணவர் தலித் என்பதால் எனது பெற்றோர் இன்னுமே எங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்க்கிறார்கள். இதனால் எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்றும் கூட அச்சமாக உள்ளது" என்று கூறியிருந்தார்.

கடத்தல் தான்
மேலும், இன்று காலை நடந்த சம்பவம் திட்டமிட்டு நடந்தது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தன்னை கடத்தும் போது நான்கு ஆண்களும் முகத்தை மூடியிருந்ததால், தான் கடத்தப்பட்டதாகவே முதலில் நினைத்ததாக அவர் கூறினார். அதில் ஒருவர் மாஸ்க்கை கழட்டிய பின்னரே, அது தான் நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தவர் என்பது தெரிந்ததாகவும் அதன் பின்னரே நிம்மதியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அதன் பின்னரே இருவரும் இணைந்து கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது
சில மாதங்களுக்கு முன்பு, 24 வயதான அந்த நபருடன் இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அப்போது பெண் மைனர் என்பதால் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் அந்த இளைஞனைப் பிடித்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணுக்கு அட்வைஸ் செய்து அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். அரபு நாடுகளில் வேலை செய்து வரும் அந்த இளைஞருக்குச் சமீபத்தில் தான் தனது காதலிக்குத் திருமணம் உறுதியானது தெரிய வந்தது. இதையடுத்து தனது நண்பர்களுடன் பெண்ணை கடத்த திட்டமிட்டு இந்த கடத்தலை நடத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், மயமான பெண்ணை கண்டுபிடிக்க போலீசார் ஆறு தனிப்படைகளையும் அமைத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications