தனுஷின் "குபேரா" படம் ஓடும்போது.. திடீரென இடிந்து விழுந்த தியேட்டர் மேற்கூரை! பலர் காயம்! அதிர்ச்சி
ஹைதராபாத்: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான குபேரா திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கிடையே தியேட்டர் ஒன்றில் படம் ஓடிக்கொண்டு இருந்த போதே திடீரெனத் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் பலர் காயமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தாஹில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் குபேரா. கடந்த 20ம் தேதி இந்தப் படம் உலகெங்கும் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் வழக்கம் போல தனுஷ் நடிப்பு அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.

குபேரா
பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படம் வெற்றிகரமாகத் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே இந்தப் படம் திரையிடப்பட்ட தியேட்டர் ஒன்றின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
குபேரா படம் ஒரே நேரத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் எடுக்கப்பட்டது. இதனால் தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் படம் மிகப் பெரியளவில் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதனால் தெலுங்கு மாநிலங்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இடிந்து விழுந்த மேற்கூரை
அப்படித் தான் தெலங்கானாவில் உள்ள மஹபூபாபாத்தில் உள்ள பிரபலத் தியேட்டரில் 'குபேரா' திரைப்படம் ஓடிக் கொண்டு இருந்தது. அப்போது திடீரென அந்தத் திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இரவு ஷோவில் பார்வையாளர்கள் ஆர்வமாக படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அப்போது திடீரென இந்த விபத்து நடந்துள்ளது.
தியேட்டர் நிர்வாகம் அலட்சியம்
திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் பல பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், உடைந்த மேற்கூரைப் பகுதிகள் முன் வரிசை சீட்கள் மேல் சிதறிக்கிடக்கின்றன. காயமடைந்தவர்கள் அலறி அடித்து வெளியேற முயன்றபோதும், திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டே இருந்தது.
தியேட்டர் நிர்வாகம் காயமடைந்தோருக்கு எந்தவொரு உதவியையும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த பார்வையாளர்கள் திரையரங்க ஊழியர்களிடம் சண்டையிட்டுள்ளனர். ஆனாலும் தியேட்டர் நிர்வாகம் எந்தவொரு முறையான பதிலையும் அளிக்கவில்லையாம்.
மக்கள் அச்சம்
பலர் தங்கள் குடும்பத்தினருடன் படத்தைப் பார்க்க வந்திருந்தனர். திடீரெனத் தியேட்டர் மேற்கூரை இடிந்ததில் அவர்கள் தான் ரொம்பவே பயந்துவிட்டனர். நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டிய அவர்கள், பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து திரையரங்க நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. மேலும் காயமடைந்தவர்களின் நிலை குறித்தும் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. படம் பார்க்க வந்தவர்கள் மீது திடீரெனத் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வசூலைக் குவிக்கும் குபேரா
'குபேரா' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து நல்ல வசூலைக் குவித்து வருகிறது. தனுஷ் பிச்சைக்காரனாக இருந்து கோடீஸ்வரனாக மாறுவது போன்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ்நாடு மட்டுமின்றி, தெலுங்கானா, நல்ல கலெக்ஷனை வாரி குவித்து வருகிறது. மேலும், குறிப்பாக தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்,












Click it and Unblock the Notifications