தெலுங்கானாவில் கேசிஆரை அலறவிடும் காங்.! ஆனா கடைசியில் வந்த ட்விஸ்ட்.. இதை எதிர்பார்க்கல! பரபர சர்வே
ஹைதராபாத்: தெலுங்கானாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அங்கே காங்கிரஸ் கட்சிக்குக் கடந்த சில மாதங்களாக மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அங்கே போட்டி கடுமையானதாக மாறியுள்ளது.

தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்குள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.30ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிச.3இல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
அதிர்ச்சி தரும் காங்கிரஸ்: இதற்கிடையே தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்தில் வெளியான மனோரமா நியூஸ்-விஎம்ஆர் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ல் 28.4% வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் அதன் வாக்கு வங்கி 10% அதிகரித்து 38.4 சதவீதமாக இருக்கும் என்று இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
வாக்கு வங்கி இந்தளவுக்கு அதிகரித்துள்ளதால் காங்கிரஸ் கட்சி இந்த முறை 52-58 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2018இல் காங்கிரஸ் வென்ற 19 இடங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.. அதேநேரம் மொத்தம் 119 இடங்களைக் கொண்ட ஒரு தெலுங்கானா சட்டசபையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க இது போதாது.
சரியும் பிஆர்எஸ்: 2014இல் தெலுங்கானா உருவாக்கப்பட்ட பிறகு நடந்த இரண்டு தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சி வென்ற நிலையில், இந்த முறை அவர்கள் கணிசமாக வாக்குகளை இழப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் பிஆர்எஸ் கட்சியின் வாங்கு வங்கி 47 சதவீதமாக இருந்த நிலையில், இந்த முறை அது 37.5 சதவீதமாகக் குறையலாம் என்று இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.. இதனால் கடந்த தேர்தலில் 88 தொகுதிகளில் வென்ற பிஆர்எஸ் கட்சிக்கு இந்த முறை 47-52 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று இந்த சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்தாண்டு வரரை அங்கே மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜகவுக்குப் பெரிய வளர்ச்சி கிடைக்காது என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.கடந்த தேர்தலைக் காட்டிலும் பாஜக வாக்கு வங்கி 3% அதிகரித்து, 10.2 சதவீதமாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே பாஜகவுக்குத் தெலுங்கானாவில் இருக்கும் நிலையில், அது ஆறு முதல் எட்டு வரை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்தான் முக்கியம்: தெலுங்கானா தேர்தல் களத்தில் மற்றொரு முக்கியமான கட்சியாக இருக்கும் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சியின் வாக்கு வங்கி 3 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாகக் குறையலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மஜ்லீஸ் கட்சி தனது ஏழு இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று அந்த சர்வே கூறுகிறது. கடந்த இரு தேர்தல்களிலும் மஜ்லீஸ் கட்சி ஏழு இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கான ஆதரவு தெலுங்கானாவில் தொடர்ந்து குறைந்தே வருகிறது. தெலுங்கானா தனியாகப் பிரிக்கப்பட்டு நடந்த முதல் தேர்தலில் தெலுங்கு தேசம் 14.7 சதவீத வாக்குகளுடன் 15 இடங்களில் வென்றது. அதேநேரம் 2018இல் அதன் வாக்கு வங்கி 3.5 சதவீதமாகச் சரிந்த நிலையில், வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இந்த முறை அதன் வாக்கு வங்கி மேலும் குறையும் என்று இந்த சர்வே கூறுகிறது.
இந்த மனோரமா நியூஸ்-விஎம்ஆர் கருத்துக் கணிப்பின்படி தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் அதிகம். பிஆர்எஸ் அல்லது காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க ஒவைசியின் ஆதரவு தேவைப்படலாம்.












Click it and Unblock the Notifications